திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு
தமிழ்நாடு முழுவதும் பருவமழை ஆங்காங்கே பெய்துவரும் நிலையில் பருவகால நோய்களான மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்களின் பரவல் அதிகரித்துள்ளதுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக டெங்கு பரவல் அதிகரித்து காணப்படுவதால் மாநிலம் முழுவதும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை பணியாளர்கள் டெங்கு கொசுக்களை அழிக்கும் பணியினை வீடுவீடாக சென்று மேற்கொள்கிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதனிடையே, திருப்பத்தூர், சிவராஜ் பேட்டையினை சேர்ந்த மணிகண்டன்(45)-சுமித்ரா(35) தம்பதியினருக்கு பிரித்திகா(15), தாரணி(13), அபிநிதி(4), யோகலட்சுமி(7)என 4 பெண் குழந்தைகளும், புருஷோத்தமன் என்னும் 8 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்
இவர்களுள் அபிநிதி, யோகலட்சுமி மற்றும் புருஷோத்தமன் உள்ளிட்ட 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதிச்செய்யப்பட்ட நிலையில், கடந்த 23ம் தேதி அவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த 3 பேர்களில் யோகலட்சுமி தற்போது பெங்களூர் தனியார் மருத்துவமனையில் வரும் நிலையில், கடந்த 26ம் தேதி அபிநிதி மற்றும் புருஷோத்தமன் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அபிநிதி சிகிச்சை பலனின்றி இன்று(செப்.,28)அதிகாலை உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் உடலை மருத்துவர்கள் அவரது பெற்றோர் கையில் ஒப்படைத்துள்ளனர். அபிநிதியின் தம்பி புருஷோத்தமனுக்கு தொடர்ந்து சிச்சையளிக்கப்பட்டு வருகிறது. டெங்குவால் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.