கேரளா கல்லூரி விழாவில், கூட்ட நெரிசலில் நான்கு மாணவர்கள் இறப்பு; நடந்தது என்ன?
நேற்று கேரளாவின் பல்கலைக்கழகதில் நடைபெற்ற விழாவில், திடீரென பெய்த மழையினால், கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சோக சம்பவம் எப்படி நடந்தது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (CUSAT) திறந்தவெளி அரங்கத்தில், பிரபல பாப் பாடகி நிகிதா காந்தியின் நிகழ்ச்சி நடக்கவிருந்தது. நிகழ்ச்சி துவங்கும் முன்னரே கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அனுமதி சீட்டுகளை எடுத்து வருபவர்களை, தொகுதியாக பிரித்து நுழைய அனுமதித்தனர்.
நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் ஒரே வாயில்
நுழைவாயிலுக்கு வெளியே ஆர்வத்துடன் இளைஞர்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். கச்சேரிக்கு நுழைவு அனுமதி சீட்டு பெற்றவர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், உள்ளூர்வாசிகள் பலர் ஆடிட்டோரியத்திற்கு வெளியே கூடியிருந்தனர் என்று நேரில் பார்த்த ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். சிவிக் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, திறந்தவெளி அரங்கிற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் ஒரே வாயில் பயன்படுத்தப்பட்டுள்ளதும் ஒரு காரணம் என கூறுகிறார்கள். ஆடிட்டோரியத்தின் கொள்ளளவு குறைந்தது 1,000 ஆக இருந்ததாகவும், நெரிசலின் போது பல இருக்கைகள் காலியாக இருந்ததாகவும் மூத்த போலீஸ் அதிகாரி எம்.ஆர்.அஜித் குமார் தெரிவித்தார்.
கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 4 மாணவர்கள் உயிரிழப்பு
"சம்பவம் நடந்தபோது, நிகழ்ச்சி தொடங்கவில்லை. ஆடிட்டோரியம் நிரம்பவில்லை. அமைப்பாளர்கள் பாஸ்களைச் சரிபார்த்து, தொகுதிகளாக நுழைய அனுமதித்தனர். திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது, மக்கள் வரிசைகளை உடைத்து உள்ளே நுழையத் தொடங்கினர்." "அங்கே படிக்கட்டுகள் இருந்தன. அதில் சிலர் இடறி விழுந்தனர். அதை கவனிக்காத மற்றவர்கள் அவர்கள் மீது மிதித்து சென்றுள்ளனர். இதில் நான்கு மாணவர்கள் இறந்தனர். இது ஒரு விபத்து" என்று அதிகாரி கூறினார். ஆடிட்டோரியம் போதுமான அளவு இருந்ததால், சம்பவம் நடந்திருக்கக் கூடாது என்றும் அந்த அதிகாரி கூறினார். "மழை பெய்தபோது ஏற்பட்ட திடீர் அவசரமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டதன் விளைவு இது," என்று அவர் மேலும் கூறினார்.
30க்கும் மேற்பட்டோர் காயம்
உயிரிழந்த மாணவர்கள் அதுல் தம்பி, ஆன் ருப்தா, சாரா தாமஸ் மற்றும் அல்வின் தைக்காட்டுசேரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும், 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த துர்சம்பவத்தை அடுத்து, கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று இரவு அமைச்சர்கள் அவசர கூட்டம் நடந்தது. மாணவர்கள் மறைவுக்கு அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் ஒருங்கிணைப்பார் என்று முதல்வர் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்கு பாடகி நிகிதா காந்தியும் வருத்தம் தெரிவித்துள்ளார்.