384வது சென்னை தினம் - வரலாற்று சிறப்புகள் ஓர் பார்வை
கடந்த 2004ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி 'சென்னை தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. வணிகம் செய்வதற்காக இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனி 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ல் சென்னையை விலைக்கு வாங்கியது. அப்போது, 'மதராசபட்டிணம்' என்று அழைக்கப்பட்ட சென்னை விடுதலை பெற்ற பின்னர் 'மெட்ராஸ் மாகாணம்' என அழைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த காலகட்டத்தில் 1996-ஜூலை.,17ம் தேதி 'சென்னை' என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, சென்னைக்கு இன்று(ஆகஸ்ட்.,22) 384 வயதாகும் நிலையில், இதனை கொண்டாட மாநகராட்சி பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜார்ஜ் கோட்டை சிறப்புகள்
சென்னையின் முதல் கட்டிடம் என்றால் அது 'ஜார்ஜ் கோட்டை' தான். சென்னை உருவான 1639ல் தான் இக்கட்டிடம் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே சாதாரண நிலப்பரப்பாக இருந்த சென்னை வணிகம், மக்கள் வாழ்விடம் போன்ற மாற்றங்களை பெற்றது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் சிறப்பு என்னவென்றால், பல ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை தமிழக அரசு நிர்வாகம் இங்கு தான் செயல்பட்டு வருகிறது. அடுத்த சிறப்பு என்னவென்றால் சென்னை உருவான காலகட்டத்தில் இருந்தே மருத்துவத்துறை மிக சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதற்கு சான்றாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை 1664-ஆண்டிலும், ஸ்டான்லி மருத்துவமனை 1938ல் இருந்தும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை 1911ம் ஆண்டில் இருந்தே செயல்பட்டு வருகிறது.
சென்னை உயர்நீதிமன்றம் வரலாறு
அடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் : ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்த காலகட்டத்தில் அவர்களால் கட்டப்பட்டது தான் தற்போதைய சென்னை உயர்நீதிமன்றம். முதலில் 'சுப்ரீம் கோர்ட் ஆப் மெட்ராஸ்' என்று அழைக்கப்பட்ட இந்நீதிமன்றம் 1862ம் ஆண்டுமுதல் 'மெட்ராஸ் ஹை கோர்ட்' என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளிக்கப்பட்டதன் பேரில் தான் இந்த கட்டிடம் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அதேபோல், அடையாறு கிளப் 1832ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது. முதன்முதலாக பெண்களுக்கு உறுப்பினர் உரிமை கொடுத்த இந்த கிளப் ஐரோப்பியர்களுக்காக மட்டுமே கட்டப்பட்டது. 1960ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியர்களுக்கு உறுப்பினர் உரிமை அளிக்கப்பட்டது என்று தெரிகிறது.
சென்னை ரயில் நிலையங்கள், 'ராஜாஜி அரங்கம்' குறித்த தகவல்கள்
அடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் : இந்திய நாட்டின் மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இயங்கிவருகிறது. இது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பழைய கட்டிடங்களுள் ஒன்றாகும். இதற்கிடையே, சென்னையின் முதல் ரயில் நிலையம் என்னும் பெயரினை பெற்ற ராயபுரம் ரயில் நிலையம் 1856ல் கட்டப்பட்டதாகும். இது இந்தியாவின் மிக பழமையான ரயில் நிலையம் என்றும் கூறப்படுகிறது. அடுத்ததாக ராஜாஜி மண்டபம், இம்மண்டபம் திப்பு சுல்தானை வீழ்த்தியதன் நினைவாக ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. முன்னர், விருந்து மண்டபம் என்று அழைக்கப்பட்ட இவ்விடத்தில் ராஜாஜி முதல்வராக இருந்தபொழுது சட்டமன்ற கூட்டங்களை இங்கு நடத்தியுள்ளார். அதனால் அவர் நினைவாகவே இதற்கு 'ராஜாஜி அரங்கம்' என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
ஆர்மேனிய தேவாலய சிறப்புகள் மற்றும் ஆளுநரின் சர்ச்சை பதிவு
ஆர்மேனிய தேவாலயம் : இது 1712ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தேவாலயம் ஆகும். இதன் சிறப்பு என்னவென்றால், அன்னை மரியாள், இயேசுவை சொர்க்கத்திற்கு அழைத்துச்செல்லும் உருவம் அமைக்கப்பட்டுள்ளதாம். மேலும் இதன் மணிக்கோபுரத்தில் உள்ள 6 மணிகள் ஒவ்வொன்றும் 150 கிலோ.,எடைக்கொண்டதாகும். இவ்வாறு பல கணக்கில் அடங்கா சிறப்புகளை சென்னை மாநகரம் பெற்றுள்ளது. அத்தகைய சிறப்புமிக்க சென்னை உருவான 384வது ஆண்டின் தினத்திற்கு பலர் தங்கள் வாழ்த்துக்களை இணையத்தில் பதிவுச்செய்து கொண்டாடி வருகிறார்கள். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ட்விட்டர் பக்கத்தில்,"மெட்ராஸ் தினத்தில் எனது வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். கலாசார பன்முகத்தன்மை, வேரூன்றிய ஆன்மீகம், உள்ளிட்டவைகளை ஆர்வத்துடனும், அர்ப்பணிப்பு செய்தும் கொண்டாடுவோம் என்று பதிவிட்டுள்ளார். 'மெட்ராஸ்'என அவர் பதிவு செய்திருப்பது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.