மணிப்பூர் வன்முறை - குகி சமூகத்தினை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் நாகா பழங்குடியினரான தாங்குல்ஸ் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று(ஆகஸ்ட்.,18) அதிகாலை 4.30 மணியளவில் உக்ருல் மாவட்டத்தில் இருந்து 47 கி.மீ.,தொலைவில் அமைந்திருக்கும் குகி பழங்குடியின மக்கள் வாழும் தவுவாய் என்னும் கிராமத்தில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. அதன்படி, இந்த கிராமத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மலைபகுதிகளில் இருந்து கீழே இறங்கிய ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று, குகி பழங்குடியினர் வாழும் கிராமத்தினை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளது. காவலர்களை நோக்கி இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 3 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து உக்ருல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.வஷும் கூறியதாவது, "இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ள நிலையில், காயம் அடைந்தோர் குறித்த விவரங்கள் ஏதும் இன்னும் அறியப்படவில்லை" என்று கூறியுள்ளார். மேலும், இந்திய ராணுவமும், மாநில காவல்துறையும் இணைந்து இந்த தாக்குதல் நடத்திய கும்பலினை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தினை தொடர்ந்து அப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் என்.வஷும் கூறினார். இதனிடையே கடந்த 5ம் தேதி சுராசந்த்பூர், பிஷ்ணுபூர் உள்ளிட்ட 2 மாவட்டங்களிலுள்ள 2 வெவ்வேறு சமூகத்தினர் மத்தியில் நடந்த 2 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் குகி சமுதாயத்தினை சேர்ந்த 2 பேரும், மைத்தேயி சமூகத்தினை சேர்ந்த 3 பேரும் பலியானது குறிப்பிடத்தக்கது.