கழிவுநீர் தொட்டியில் 3 பேர் உயிரிழந்தோர் விவகாரம் - தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
கடலூர், ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள கானூர் மாஞ்சோலையை சேர்ந்தவர் பிச்சமுத்து மகன் கிருஷ்ணமூர்த்தி(40),அவரது மனைவி காயத்ரி(35). இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளார்கள். கிருஷ்ணமூர்த்தியுடன் சேலம் ஆத்தூர் அருகேயுள்ள தலைவாசலை சேர்ந்த அவரது மாமா மகன் சக்திவேல்(22)என்பவரும் தங்கி தச்சு வேலை செய்துவந்துள்ளார். இதற்கிடையே கிருஷ்ணமூர்த்தி உள்ள அதேப்பகுதியில் அவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இப்பணியில் கானூர் பகுதியினை சேர்ந்த கொத்தனார் பாலச்சந்திரன்(32)என்பவர் ஈடுபட்டிருந்தார். இந்த வீட்டின் முன்பே புதிதாக ஒரு செப்டிக்டேங்க் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த டேங்கின் மேற்பகுதியில் கான்கிரீட் போடுவதற்காக செப்டிக்டேங்க் குழிக்குள் சாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்துள்ளது. அந்த சாரத்தினை அகற்றுவதற்காக கடந்த 12ம்தேதி கிருஷ்ணமூர்த்தி,பாலச்சந்திரன்,சக்திவேல் ஆகியோர் செப்டிக்டேங்க் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறுத்துளை வழியே ஒருவர்பின் ஒருவராக உள்ளே இறங்கியுள்ளார்கள்.
4 வாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவு
உள்ளே இறங்கிய 3 பேருமே வெகுநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் கிருஷ்ணமூர்த்தி தாயார் சரஸ்வதி குழிக்குள் எட்டிப்பார்த்தார். அப்போது அவர்கள் மூவரும் விஷவாயு தாக்கி இறந்துக்கிடந்தது தெரியவந்துள்ளது. இந்த மரணத்தால் அந்த 3பேரின் குடும்பத்தாரும், அப்பகுதி மக்களும் பெரும்சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். மேலும் இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருகிறார்கள். இந்நிலையில் கழிவுநீர்தொட்டியில் சுத்தம்செய்ய இறங்கிய 3பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி இதுபோன்ற மரணங்கள் நடக்காமல் தடுக்க மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும், மரணமடைந்த குடும்பத்தாருக்கு அரசு கொடுத்த நிவாரணத்தொகை குறித்தும் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.