
மம்தா பானர்ஜியை தவிர மற்ற அனைத்து மாநில முதலமைச்சர்களும் கோடீஸ்வரர்கள்
செய்தி முன்னோட்டம்
மம்தா பானர்ஜியை தவிர மற்ற மாநில முதல்வர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் என்று புதிய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
அதிகபட்சமாக, ஆந்திராவின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ரூ.510 கோடி சொத்துக்களை வைத்துள்ளார்.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்(ADR) நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த தகவல்கள் கணக்கிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் என்பதும் இந்தியாவிலேயே குறைவாக சொத்து வைத்திருக்கும் முதல்வர் இவர் தான் என்பதும் தெரியவந்திருக்கிறது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 30 முதலமைச்சர்களுடைய தேர்தல் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்த பின்னர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக ADR மற்றும் தேர்தல் கண்காணிப்பகம்(NEW) தெரிவித்துள்ளது.
28 மாநில முதல்வர்களும் இரண்டு யூனியன் பிரதேச முதல்வர்களும் இதில் அடங்குவர்.
details
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொத்து மதிப்பு
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தற்போது முதல்வர் இல்லை என்பதால் அது சேர்க்கப்படவில்லை.
பகுப்பாய்வு செய்யப்பட்ட 30 முதல்வர்களில், 29(97 சதவீதம்) பேர் கோடீஸ்வரர்கள் ஆவர்.
சொத்து மதிப்பில் முதல் மூன்று இடங்களில் ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி(ரூ. 510 கோடி), அருணாச்சலப் பிரதேசத்தின் பெமா காண்டு(ரூ.163 கோடி), ஒடிசாவின் நவீன் பட்நாயக்(ரூ.63 கோடி) ஆகியோர் உள்ளனர்.
சொத்து மதிப்பில் கடைசி மூன்று இடங்களில் மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி(ரூ.15 லட்சம்), கேரளாவின் பினராயி விஜயன்(ரூ.1 கோடி) மற்றும் ஹரியானாவின் மனோகர் லால்(ரூ.1 கோடி) ஆகியோர் உள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொத்து மதிப்பு ரூ.8 கோடிக்கும் மேல்(ரூ.8,88,75,339) என்று குறிப்பிடப்பட்டுள்ளது .