மத்தியப் பிரதேசத்தில் 28 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
இன்று பிற்பகல் 28 உறுப்பினர்கள் மத்தியப் பிரதேச அமைச்சரவையில் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். பதவியேற்ற 28 எம்எல்ஏக்களில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரஹலாத் படேல் மற்றும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா உட்பட 18 பேர் மூத்த அமைச்சர்களாக பணியாற்ற இருக்கிறார்கள். அவர்களை தவிர, மீதமுள்ள 10 பேர் இணை அமைச்சர்களாக பணியாற்ற உள்ளனர். சமீபத்தில், மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் 153 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, 5வது முறையாக அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்தது. அதன் பிறகு, மத்திய பிரதேசத்தின் முதல்வராக பாஜகவின் மோகன் யாதவ் பதவியேற்றார்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதிக இடங்கள்
இந்நிலையில், முதல்வர் மோகன் யாதவின் அமைச்சரவையில் இன்று புதிதாக 28 அமைச்சர்கள் இணைந்துள்ளனர். பதிவியேற்ற அமைச்சர்களில் 5 பேர் பெண்கள் ஆவர். புதிய மத்திய பிரதேச முதல்வர் உட்பட அமைச்சரவையில் உள்ள 12 பேர் ஓபிசி அல்லது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். அடுத்த வருடம், இந்திய பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களின் ஆதரவை பெற பாஜக இது போன்ற முயற்சிகளை எடுத்து வருகிறது. இன்று பதவியேற்றவர்களில் நிர்மலா பூரியா, நாராயண் குஷ்வாஹா மற்றும் நாகர் சிங் சவுகான் ஆகியோர் அடங்குவர். நிர்மலா பூரியா முன்பு ஜூனியர் சுகாதார அமைச்சராகவும், நாராயண் குஷ்வாஹா முன்பு உள்துறை அமைச்சராகவும் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.