திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருநாள் - 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடைபெறும். அதன்படி, இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் கடைசி தினமான 26ம் தேதியன்று இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஆலைய கருவறையில் அதிகாலை 4 மணிக்கும், மகா தீபம் மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை மீது ஏற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்று சாமியை தரிசனம் செய்ய உலகம் முழுவதுமிருந்து 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை நகரின் 9 சாலைகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள்
இதற்கான முன்னேற்பாடுகளை தற்போது திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறை மேற்கொண்டு வருகிறது. இதன் ஓர் பகுதியாக திருவண்ணாமலை நகரின் 9 சாலைகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக வரும் நவம்பர் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளானது சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் பெங்களூர், புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்கள் இடையே இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.