கன்னியாகுமரியில் அமைந்துள்ள வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டம்; தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையின் 25வது ஆண்டு நிறைவு விழா மிக பெரியளவில் கொண்டாட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வெள்ளி விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு வரும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரண்டு நாட்களில் திருவள்ளுவரின் சிறப்பை உலகிற்கு நினைவூட்டும் வகையில் பெருவிழா நடத்த உள்ளது. இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கலை, கல்வி, மற்றும் சமுதாயத்திற்கான திருவள்ளுவரின் பெரும் பங்களிப்பை நினைவுகூர்ந்தார். கருணாநிதியின் சீரிய முயற்சியால் கடந்த 2000-ஆம் ஆண்டு குமரியில் அமைக்கப்பட்டது இந்த திருவள்ளுவர் சிலை. தற்போது வரை இந்த சிலை சுற்றுலாவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Twitter Post
விழாவின் முக்கிய நிகழ்வுகள் என்ன இருக்கும்
இந்த 2 நாள் விழாவில், மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள், சோஷியல் மீடியா ஷார்ட்ஸ் மற்றும் ரீல்ஸ் மூலம் திருக்குறளின் சிறப்பை எளிய முறையில் பிரசுரிப்பது, 3D Laser காட்சியுடன் திருவள்ளுவர் சிலையின் அருகில் சிறப்பு நிகழ்ச்சி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிகழ்ச்சிகள் மற்றும் மாலை அணிவிக்கும் நிகழ்வுகள் உள்ளிட்டவை திட்டமிடப்பட்டுள்ளன. உலகமெங்கும் உள்ள தமிழ்ச் சங்கங்கள், தமிழ் இணைய கழகங்கள் மூலம் திருக்குறளின் பெருமைகள் குறித்து போட்டிகள், பேச்சரங்கம், கருத்தரங்கம், சின்ன கலைகளில் போட்டிகள் என்றவாறு பல்வேறு இடங்களில் திருக்குறளின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. உலகத் தமிழர்களுக்கான யூடியூப் ஒளிபரப்புகள் மற்றும் மற்ற இடங்களிலும் திருக்குறளின் பெருமைகள், வள்ளுவரின் எண்ணங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பலதரப்பட்ட நடவடிக்கைகளும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.