கோவை மாவட்டம் வால்பாறை அரசு பள்ளி மாணவர்கள் 24 பேருக்கு வாந்தி, மயக்கம்
கோவை மாவட்டம் வால்பாறையில் ஸ்டேன்மோர் சந்திப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இங்கு 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 60 மாணவ-மாணவியர்கள் படித்து வருகிறார்கள். அதன்படி நேற்று(ஏப்ரல்.,27)பள்ளிக்கு 45 மாணவர்கள் வருகைத்தந்தாக கூறப்படுகிறது. இவர்கள் வழக்கம்போல் மதியம் பள்ளியில் உணவை உட்கொண்டுள்ளார்கள். பின்னர் 3.15மணியளவில் பள்ளியில் 24 மாணவ-மாணவியருக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்று வலி, தலைவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார்கள். இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவலளித்துள்ளார். அதன்பேரில், அங்கு வந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மாணவ-மாணவியர்களை சோதித்து பார்த்து சிகிச்சை அளித்தார்கள். அதில் 24 மாணவர்கள் மட்டும் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வாந்தி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை
இதுகுறித்து அறிந்த பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து பாதிப்பில்லாத குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். மீதிப்பேர் மருத்துவமனைக்கு பிள்ளைகளை காணச்சென்றனர். பின்னர் இதுகுறித்து அறிந்த மாவட்ட தாசில்தார், நகராட்சி ஆணையாளர், நகராட்சி தலைவர் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து நிலவரம் குறித்து கேட்டறிந்தனர். வீட்டிற்கு அழைத்துச்செல்லப்பட்ட மாணவர்களையும் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் நலமாக இருந்த 27பேர் பெற்றோருடன் வீட்டிற்குச்சென்ற நிலையில், மிக சோர்வாக காணப்பட்ட 8பேர் மட்டும் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகிறார்கள். தற்போது மாணவ-மாணவியரின் வாந்தி மாதிரிகள் மற்றும் குடிநீர் பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது. மாணவ-மாணவியரின் இந்த திடீர் வாந்தி,மயக்கத்திற்கு சத்துணவும், குடிநீரும் தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து மருத்துவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.