Page Loader
மக்களவைத் தேர்தல்: பிரதமர் மோடி மற்றும் 34 அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மக்களவைத் தேர்தல்: பிரதமர் மோடி மற்றும் 34 அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

எழுதியவர் Sindhuja SM
Mar 02, 2024
06:49 pm

செய்தி முன்னோட்டம்

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் 370 இடங்களை வெல்ல வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கும் பாஜக, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே 195 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில், மூன்றாவது முறையாக வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குஜராத்தின் காந்திநகரில் மீண்டும் களமிறங்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 28 பெண்கள், 50 வயதுக்குட்பட்ட 47 தலைவர்கள் மற்றும் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த 57 பேர் என 34 அமைச்சர்கள் மற்றும் இரண்டு முன்னாள் முதல்வர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. 195 பேரில், 51 பேர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மக்களவை 

திருவனந்தபுரத்தில் சசி தரூருக்கு எதிராக ராஜீவ் சந்திரசேகர் போட்டி 

20 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஐந்து பேர் டெல்லியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். டெல்லியில் பிரவீன் கண்டேல்வால், மனோஜ் திவாரி, சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் ஆகியோர் போட்டியிட உள்ளனர். முன்னதாக மாநிலங்களவையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, குஜராத்தில் உள்ள போர்பந்தர் தொகுதியில் போட்டியிடுகிறார். மற்றொரு ராஜ்யசபா உறுப்பினரும் அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் காங்கிரஸின் சசி தரூர் போட்டியிடும் இடத்தில் போட்டியிட உள்ளதால், திருவனந்தபுரத்தில் ஒரு சுவாரஸ்யமான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேசத்தின் குணா தொகுதியிலும், பூபேந்தர் யாதவ், ஆல்வார் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.