Page Loader
விமானிகள் பயிற்சியில் தவறிழைத்ததால் ஏர் ஏசியாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம்
நியமிக்கப்பட்ட எட்டு தேர்வாளர்களுக்கும் தலா ரூ.3 லட்சம் அபராதம்

விமானிகள் பயிற்சியில் தவறிழைத்ததால் ஏர் ஏசியாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம்

எழுதியவர் Sindhuja SM
Feb 11, 2023
03:40 pm

செய்தி முன்னோட்டம்

விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனம்(DGCA), ஏர் ஏசியா (இந்தியா) லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது. பைலட் திறன் சோதனையின் போது, விமானிகளின் சில கட்டாய பயிற்சிகள் கால அட்டவணையின் படி செய்யப்படாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டாய பயிற்சிகளைத் தவறவிடுவது DGCA விதிமுறைகளுக்கு புறம்பானதாகும். "DGCA சிவில் விமானப் போக்குவரத்துத் தேவைகளின்படி தனது பணிகளைச் செய்யத் தவறியதற்காக" விமான நிறுவனத்தின் பயிற்சித் தலைவர் மூன்று மாதங்களுக்கு தாற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், நியமிக்கப்பட்ட எட்டு தேர்வாளர்களுக்கும் தலா ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஏர் ஏசியா

கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட கண்காணிப்பின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

சம்பந்தப்பட்ட மேலாளர், பயிற்சித் தலைவர் மற்றும் ஏர் ஏசியாவின் அனைத்து நியமிக்கப்பட்ட தேர்வாளர்கள் மீதும் ஏன் அமலாக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அவர்களின் எழுத்துப்பூர்வ பதில்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஏர் ஏசியா (இந்தியா), ஒரு அறிக்கையில், DGCA உத்தரவை மறுஆய்வு செய்து வருவதாகவும், அதற்கு எதிரான மேல்முறையீட்டை பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 23-25 ​​தேதிகளில் DGCA நடத்திய கண்காணிப்பு ஆய்வைத் தொடர்ந்து இந்த அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.