சென்னை IITஇல் தற்கொலைக்கு முயன்ற 2 மாணவர்களில் ஒருவர் பலி
சென்னையில் உள்ள IIT-மெட்ராஸில் முதுகலை பொறியியல் மாணவர் ஒருவர் அவரது விடுதி அறையில் இறந்து கிடந்ததாக போலீஸார் இன்று(பிப் 14) தெரிவித்துள்ளனர். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் எம்எஸ் படித்து வரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 22 வயது மாணவர், IIT-மெட்ராஸ் வளாகத்தில் உள்ள தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். மற்றொரு மாணவர் தன் நண்பரை காணவில்லை என்று விடுதி காப்பாளரிடம் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து, சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. உயிரிழந்தவர் தங்கியிருந்த அறையின் கதவைத் திறந்து பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தற்கொலைக்கு முயன்ற இன்னொரு மாணவர்
குடும்ப பிரச்சனைகளால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோட்டூர்புரம் போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல், இன்னொரு சம்பவமும் அங்கு நடந்திருக்கிறது. கர்நாடகாவைச் சேர்ந்த இந்த கல்லூரியின் மற்றொரு மாணவர், தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து IIT மெட்ராஸ் தரப்பில் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.