IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா
IIT பாம்பேயில் 18 வயது மாணவர் ஒருவர், நேற்று(பிப் 12) பிற்பகல் கல்லூரி வளாகத்தில் உள்ள தனது விடுதி கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து இறந்தார். தற்கொலைக் கடிதம் எதுவும் இல்லை என்பதால் போலீஸார் விபத்து என்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், பட்டியல் சாதி மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு காரணமாக அவர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக ஒரு மாணவர் குழு குற்றம் சாட்டியுள்ளது. BTech மாணவர் தர்ஷன் சோலங்கி அகமதாபாத்தைச் சேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்தனர். அவர் மூன்று மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் சேர்ந்தார் என்றும் அவரது முதல் செமஸ்டர் தேர்வுகள் சனிக்கிழமை முடிவடைந்தது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அம்பேத்கர் பெரியார் புலே படிப்பு வட்டத்தின்(APPSC) ட்வீட்
படிப்பு சுமை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்பதை பவாய் போலீசார் கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர். IIT பாம்பேவை சேர்ந்த அம்பேத்கர் பெரியார் புலே படிப்பு வட்டத்தின்(APPSC) ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துகள்: 3 மாதங்களுக்கு முன் IIT பாம்பேயில் BTech-க்காக சேர்ந்த தர்ஷன் சோலங்கி என்ற 18 வயது தலித் மாணவனின் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கிறோம். இது ஒரு தனிப்பட்ட பிரச்சினை அல்ல, மாறாக ஒரு நிறுவன கொலை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தலித் பகுஜன் ஆதிவாசி மாணவர்களுக்கு உகந்த பாதுகாப்பான இடமாக கல்லூரியை மாற்றுவதற்கு நிறுவனம் அக்கறை காட்டவில்லை. முதலாம் ஆண்டு மாணவர்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துக்களால் கேலி செய்யப்படுவதால் மிகவும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.