
இப்போது வாட்ஸ்அப் மூலமாகவும் சென்னை மெட்ரோ ட்ரெயின் டிக்கெட்டுகளை வாங்கலாம்: எப்படி?
செய்தி முன்னோட்டம்
புதிய வாட்ஸ்அப் அடிப்படையிலான QR குறியீடு டிக்கெட் சேவையை அறிமுகப்படுத்தி, பயணிகள் டிக்கெட் வாங்கும் விதத்தில் சென்னை மெட்ரோ புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த புதுமையான அணுகுமுறை, பாரம்பரிய காகித QR குறியீடு டிக்கெட்டுகள் மற்றும் டோக்கன்களுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், கோயம்பேடு மற்றும் விமான நிலையம் என்ற இரண்டு நிலையங்களில் மட்டுமே இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பயணிகளிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைக்கவே, தற்போது அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சேவையில், திரைப்பட டிக்கெட்டுகள் போலவே, உங்கள் மொபைல் போனுக்கே டிக்கெட் வந்துவிடும். தற்போது, காகித டிக்கெட் வழங்குவதால் மாதத்திற்கு நான்கு-டன் காகிதம் பயன்படுத்தப்படுகிறது. இந்த புதிய சேவை அமைப்பு, அதை குறைக்கும் எனவும் கூறப்படுகிறது.
நடைமுறை
இந்த சேவையை பயன்படுத்துவது எப்படி?
இந்த வகை டிக்கெட் சேவையை பெற, பயணிகள் டிக்கெட் கவுண்டரில் தங்கள் தொலைபேசி எண்களை வழங்க வேண்டும். கூடவே, அவர்கள் போக வேண்டிய இடம் மற்றும் தேவையான டிக்கெட்டுகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட வேண்டும். உடனே ஒரு QR குறியீடு உங்களின் WhatsAppக்கு அனுப்பப்படும். இந்த QR கோட் மூலம் நீங்கள் எளிதாக பணம் செலுத்த முடியும். இது பற்றி CMRL நிர்வாக இயக்குநர் எம்.ஏ.சித்திக், "இந்தச் சேவையானது, பயணச்சீட்டு வழங்கும் செயல்முறையை சீரமைத்து, மெட்ரோ பயனர்களுக்கு சுலபமாக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார். வாட்ஸ்அப்பில் QR குறியீடுகளுக்கான இந்த கட்டண பரிவர்த்தனை முற்றிலும் பாதுகாப்பானது. பணம் செலுத்துவதற்காக பயன்படுத்தப்படும் பயணிகளின் மொபைல் எண்கள் அதன் சர்வர்களில் சேமிக்கப்படவில்லை என்று சென்னை மெட்ரோ உறுதியளிக்கிறது.