விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி!
செய்தி முன்னோட்டம்
சிக்கிம் மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தால் 16 ராணுவ வீரர்கள் இன்று உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
சிக்கிமில் இருக்கும் சேட்டன் என்ற இடத்தில் இருந்து தாங்கு என்ற இடத்திற்கு 3 வாகனங்களில் ராணுவ வீரர்கள் சென்றுள்ளனர்.
ஜெம்மா என்ற பகுதி வழியாக அவர்கள் செல்லும் போது, ஒரு வாகனம் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. அந்த வாகனத்தில் இருந்த 16 பேர் உயிழந்துள்ளனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இறந்தவர்களில் 3 பேர் இளநிலை அதிகாரிகள் என்றும் 13 பேர் ராணுவ வீரர்கள் என்றும் இந்திய ராணுவம் தெரிவித்திருக்கிறது.
தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழு, காயமடைந்த 4 பேரையும் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
23 Dec 2022
பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்!
நடந்த இந்த சம்பவத்தின் விவரங்களை வெளியிட்ட இந்திய ராணுவம், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
"16 ராணுவ வீரர்கள் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. அவர்கள் நாட்டுக்காக செய்த சேவைக்கு நாடு எப்போதும் அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கும். இறந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமைடைய பிரார்த்திக்கிறேன்"
என்று குறிப்பிட்டிருக்கிறார்.