போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை ECR -இல் புதிய உயர்மட்ட மேம்பாலம்: அமைச்சர் தகவல்
சென்னை ECRஇல் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 15 கிமீ நீளத்திற்கு புதிய உயர்மட்ட மேம்பாலம்(elevated corridor) அமைக்கவிருப்பதாக மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார். இந்த மேம்பாலத்தில், ஐந்து நுழைவு, வெளியேறும் வழிகளும், 15 கி.மீ தூரத்திற்கு டைடல் பார்க் சந்திப்பில் இருந்து உத்தண்டியில் முடிவடையும் வகையில் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் 18 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த பாதையில், எல்பி ரோடு சந்திப்பு, திருவான்மியூர் ஆர்டிஓ, நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் அக்கரை ஆகிய இடங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள் அமைக்கப்படும். மேம்பால பணிகளுக்காக ரூ.1,075 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், இதில் ரூ.940 கோடி நிலம் கையகப்படுத்துவதற்காக செலவிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
புதிய உயர்மட்ட மேம்பாலம்
ஆறுவழி சாலை அமைக்கவும் திட்டம்
திருவான்மியூர் முதல் அக்கரை வரையிலான 10 கி.மீ., தூரத்துக்கு ஆறுவழிச்சாலை விரிவாக்கப்பணியை ஆய்வு செய்த அமைச்சர். "அடுத்த ஆண்டு ஏப்ரல் 11ம் தேதிக்குள் அகலப்படுத்தும் பணி நிறைவடையும். சோழிங்கநல்லூர், பாலவாக்கம், கொட்டிவாக்கம் மற்றும் பிற கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று, நிதி விநியோகிக்கப்படுகிறது" என அவர் கூறினார். சுமார் 69,000 வாகனங்கள் டைடல் பார்க் மற்றும் உத்தண்டி இடையே 15 கிமீ நீளமுள்ள ECR ஐப் பயன்படுத்துகின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக தற்போது இந்த தூரத்தை கடக்க 45 முதல் 60 நிமிடங்கள் ஆகிறது. இந்த நெரிசலை சமாளிக்கவே இந்த elevated corridor திட்டம் முன்மொழியப்பட்டது எனவும், இதனால் பயண நேரம் 20 நிமிடங்களாக குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.