
மகாராஷ்டிரா அரசின் பெண்கள் நலன் திட்டத்தில் 14,000 ஆண்கள் பணம் பெற்று முறைகேடு
செய்தி முன்னோட்டம்
மகாராஷ்டிராவின் லட்கி பஹின் (Ladki Bahin) என்கிற பெண்கள் நலத் திட்டத்தில், சுமார் 14,000 ஆண்களும் பதிவு செய்து பணம் பெற்றுள்ளனர். இந்த விவகாரம் தற்போது வெளியானதும் அரசும், அரசு அதிகாரிகளும் மட்டுமின்றி, பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சர் அஜித் பவார் உறுதியளித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
திட்ட விவரம்
திட்ட விவரம் மற்றும் மோசடி தகவல்
மாநில அரசின் முக்கிய திட்டமான லட்கி பஹின், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் கொண்ட ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணியின் முக்கியமான தேர்தல் வாக்குறுதியாகும். ஆனால் சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை (WCD) நடத்திய ஆய்வில், 14,298 ஆண்கள் போலியான ஆவணங்களின் மூலம் தங்களை பெண் பயனாளிகளாகப் பதிவு செய்து திட்ட நிதியைப் பெற்றிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மாநில அரசுக்கு ரூ.21.44 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நடவடிக்கை
முதற்கட்ட நடவடிக்கைகள் மற்றும் தடை
இந்த மோசடிக்கு எதிராக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. மொத்தம் 26.34 லட்சம் கணக்குகளுக்கு நிதி வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் இந்த கணக்குகளை மீளாய்வு செய்து, தகுதியுள்ள பயனாளிகளுக்கு மீண்டும் நிதி அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. WCD துறை அமைச்சர் அதிதி தட்கரே, X (முன்பு Twitter) சமூக வலைதளத்தில், "பல பயனாளிகள் ஒரே குடும்பத்தில் இருந்து உள்ளனர், சிலர் பல்வேறு அரசுத் திட்டங்களில் நன்மைகளை பெற்றுள்ளனர், மேலும் சில ஆண்களும் விண்ணப்பித்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
பதில்
அரசு தரப்பு பதிலும், எதிர்க்கட்சிகளின் சிபிஐ விசாரணை கோரிக்கையும்
இந்த சர்ச்சையின் மையத்தில், நிதியமைச்சர் அஜித் பவார், "லட்கி பஹின் திட்டம் ஏழை பெண்களுக்கு உதவ தொடங்கப்பட்டது. ஆண்கள் இத்திட்டத்தில் சேர்ப்படுவது முறையல்ல. அவர்கள் பெற்ற பணத்தை திரும்பப் பெறுவோம். தேவையெனில், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஆளுநர் முகாமை சாடிய எதிர்க்கட்சிகள், மத்திய விசாரணை அமைப்புகள் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன. NCP (சரத் பவார்) கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலே, "சிறிய விஷயங்களிலும் அரசு CBI, ED விசாரணைகளைத் தொடங்குகிறது. இந்த அளவிலான மோசடியில் சிபிஐ விசாரணை ஏன் இல்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.