திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி
தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரில் வாணியம்பாடி தோப்பலகுண்டா ஊராட்சிக்குட்பட்ட ஜாடன்குட்டை கிராமப்பகுதியில் வசித்து வரும் விவசாயி சக்ரவர்த்தி. இவருக்கு 13 வயதில் சூர்யப்பிரகாஷ் என்னும் மகன் உள்ளார். இவர் அதே பகுதியிலுள்ள பள்ளியில் 8ம்வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று(ஜூலை.,4)மாலை சூர்யபிரகாஷுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவரது பெற்றோர் அவனை நாயனசெருவுப்பகுதியில் கிளினிக் ஒன்றினை நடத்தும் 38 வயதுடைய கோபிநாத் என்பவரிடம் அழைத்து சென்றுள்ளார்கள். அந்த சிறுவனை பரிசோதித்த அவர் அவனுக்கு ஒரு ஊசியினை செலுத்தியுள்ளார். அதன்பின்னர் வீட்டிற்கு வந்து ஓய்வு எடுத்து கொண்டிருந்த சிறுவனுக்கு சிறிது நேரத்திலேயே உடல்நிலை மிக மோசமாக மாறியுள்ளது. சிறுவன் மயக்கமடைந்த நிலையில் அவனை தூக்கிக்கொண்டு அவனது பெற்றோர் நாட்றம்பள்ளி அரசு சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
லேப் டெக்னீஷியன் படித்துவிட்டு மருத்துவம் செய்து வந்த போலி மருத்துவர்
அங்கு அந்த சிறுவனை பரிசோதித்த மருத்துவர், சூர்யபிரகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். தங்கள் மகனை இழந்த சோகத்தில் அந்த பெற்றோர் கதறி அழுதுள்ளனர். பின்னர், தனியார் கிளினிக்கில் போட்ட ஊசியால் தான் தங்கள் மகன் இறந்ததாக கூறிய சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று முற்றுகையிட்டதோடு, திம்மம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர். இந்த புகாரின்பேரில் காவல்துறை சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதனையடுத்து, அந்த கோபிநாத்தை காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் லேப் டெக்னீஷியன் படித்துவிட்டு மருத்துவராக தன்னை காட்டிக்கொண்டு மருத்துவம் செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.