தேர்தலில் வென்ற பிறகு கட்சி மாறிய 111 எம்பி, எம்எல்ஏக்கள்! முதலிடத்தில் எந்த மாநிலம்?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் 2022 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு, 26 மக்களவை உறுப்பினர்கள், 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் 78 சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 111 மக்கள் பிரதிநிதிகள் கட்சி மாறியுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) தெரிவித்துள்ளது. தனிநபர் கட்சித் தாவல், கட்சிகள் இணைப்பு, இடைத்தேர்தல் வெற்றிகள் மற்றும் தகுதி நீக்கத்திற்குப் பிந்தைய வெற்றிகள் ஆகிய அனைத்தும் இந்தக் கணக்கீட்டில் அடங்கும் என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
நாகலாந்து
அதிகளவில் மக்கள் பிரதிநிதிகள் கட்சி மாறிய நாகாலாந்து மற்றும் மேற்கு வங்கம்
மாநிலங்கள் வாரியான பட்டியலில் நாகாலாந்து 32 சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலிடத்தில் உள்ளது.
அங்கு ஆளும் கட்சிக்கும் நாகா மக்கள் முன்னணிக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் மறுசீரமைப்பு காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்தது.
அதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற 20 மக்களவை உறுப்பினர்கள், இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சிக்கு மாறியுள்ளனர்.
மேலும் தெலங்கானா, கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் கணிசமான உறுப்பினர்கள் கட்சி மாறியுள்ளனர்.
அதிக பலன்
அதிகளவு பயனடைந்த அரசியல் கட்சிகள் மற்றும் வெளியேறிய உறுப்பினர்கள்
கட்சி மாறிய மக்கள் பிரதிநிதிகளை ஏற்பதில் நாகா மக்கள் முன்னணி 32 உறுப்பினர்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி 29 உறுப்பினர்களையும், இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி 20 உறுப்பினர்களையும் தங்களோடு இணைத்துக் கொண்டுள்ளன.
இந்த மூன்று கட்சிகள் மட்டுமே ஒட்டுமொத்தக் கட்சித் தாவலில் 73 சதவீதப் பலனை அடைந்துள்ளன.
அதேவேளையில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் வெளியேறியுள்ளனர்.
சட்டத் திருத்தம்
கட்சித் தாவல் தடை சட்டத்தில் திருத்தங்கள் செய்ய ஏடிஆர் அமைப்பு பரிந்துரை
கட்சித் தாவல்களைக் கட்டுப்படுத்தக் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர்கள் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் பேரில் தகுதிநீக்கம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என ஏடிஆர் அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
மேலும் தகுதிநீக்க மனுக்கள் மீது முடிவெடுக்கக் காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், கட்சி தாவுபவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் வரை அரசுப் பதவிகளை வகிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.
அரசியல் கட்சிகளைக் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.