10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது - மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி
தமிழ்நாடு மாநிலத்தில் 2022-23ம் ஆண்டிற்கான 10ம்வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வினை மொத்தம் 9,14,320 மாணவர்கள் எழுதினர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இந்த தேர்வின் முடிவுகள் இன்று(மே.,19)காலை 10 மணிக்கு வெளியானது. அதன்படி, 10ம்வகுப்பு பொதுத்தேர்வில் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது. தேர்வெழுதிய 9,14,320 மாணவர்களுள் மொத்தம் 8,35,614 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இதில் மாணவர்கள் 4,04,904 பேர் தேர்ச்சிப்பெற்றுள்ள நிலையில், மாணவிகள் 4,30,710பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த வகையில் மாணவர்களை விட மாணவிகள் 6.5% அதிகளவில் தேர்ச்சிப்பெற்றுள்ளார்கள். தமிழ்நாட்டில் உள்ள 1,026 தமிழக அரசு பள்ளிகள் 100%தேர்ச்சி விகிதத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.
துணை தேர்வுக்கு வரும் 23 முதல் 27 தேதி வரை விண்ணப்பிக்கலாம்
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டினை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதமானது அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் அரசு பள்ளிகளின் 87.45%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.24%, தனியார் சுயநிதி பள்ளிகள் 97.38% தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அரசு பெண்கள் பள்ளிகள் 94.38%, ஆண்கள் பள்ளிகளில் 83.25% தேர்ச்சி விகிதம் பெறப்பட்டுள்ளது. மொழி பாடங்களில் யாரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுக்காததால் யாரும் முழு மதிப்பெண்ணான 500 மதிப்பெண்களை இந்தாண்டு எடுக்கவில்லை என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத்தேர்வுக்கு மே 23 முதல் 27 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு வரும் ஜூன் மாதம் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.