பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை
மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து அரசு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால், மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் இது குறித்து ட்வீட் செய்துள்ளார். "மகளிர் இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றும் தார்மீக தைரியம் மோடி அரசுக்கு மட்டுமே உள்ளது. அமைச்சரவையின் ஒப்புதலின் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள் நரேந்திர மோடி ஜி. மோடி அரசுக்கும் வாழ்த்துக்கள்." என்று அவர் தன் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். இன்று மாலை 6.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இந்த அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெண்களின் பல கால கோரிக்கைக்கு விடை கிடைத்தது
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்த யூகங்களும் எதிர்பார்ப்புகளும் இருந்து வந்தன. இந்நிலையில், இந்த முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள் கட்சி பேதம் இல்லாமல் பல காலமாக இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், மத்திய அமைச்சரவையின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார். "சிறப்பு கூட்டத் தொடருக்கு முன்பாக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இதைப் பற்றி நன்றாக விவாதித்திருக்கலாம். ரகசிய முக்காட்டின் கீழ் செயல்படுவதற்குப் பதிலாக ஒருமித்த கருத்தை உருவாக்கியிருக்கலாம்" என்றும் அவர் மேலும் ட்வீட் செய்துள்ளார்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் அது காங்கிரேஸின் வெற்றி என்கிறார் பா சிதம்பரம்
இது குறித்து ட்வீட் செய்திருக்கும் முன்னாள் நிதியமைச்சர் பா சிதம்பரம், பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால் அது காங்கிரேஸின் வெற்றி என்று தெரிவித்துள்ளார். "நாளை மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அரசு கொண்டுவந்தால், அது காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும். 9-3-2010 அன்று, அதாவது UPA அரசாங்கத்தின் போது, ராஜ்யசபாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது என்பதை நினைவில் கொள்க." என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், புதைத்து வைத்திருந்த மசோதாவை பாஜக 10 ஆண்டுகளுக்கு பிறகு எடுத்து வந்துள்ளதாக மத்திய அரசை அவர் விமர்சித்துள்ளார். "நடப்பு கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என நம்புவோம்" என்றும் அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா எப்போது முன்மொழியப்பட்டது?
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அப்போதைய தேவகவுடா அரசால் முதன்முதலில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அந்த ஆட்சி கலைக்கப்பட்டதால் அதை நிறைவேற்ற முடியவில்லை. அதன் பிறகு, 1997, 1998, 1999, 2003 என 4 முறை இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டும் ஒருமுறை கூட இதை நிறைவேற்ற முடியவில்லை. UPA அரசாங்கம் 2008இல் இதை அறிமுகப்படுத்தியது. காங்கிரஸ் ஆட்சியின் போது, 2010இல் இந்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் இதை அப்போது அறிமுகப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், தற்போது இதற்கான ஒப்புதலை பாஜக அரசாங்கம் அளித்துள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி "காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகிறது" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை
மகளிர் இடஒதுக்கீடு மசோதா, மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ளது. பெண்கள் இடஒதுக்கீடு மசோதா என்பது அரசியலமைப்பு திருத்த மசோதாவாகும். எனவே, இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. இந்த காரணத்தினால் தான் இந்த மசோதா கிட்டத்தட்ட 26 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. தற்போது, 542 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் 78 பெண் எம்.பி.க்களும், ராஜ்யசபாவின் மொத்தமுள்ள 224 உறுப்பினர்களில் 24 பெண் எம்.பி.க்களும் உள்ளனர். டிசம்பர் 2022 நிலவரப்படி, நாட்டில் உள்ள 19 மாநில சட்டமன்றங்களில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே பெண்கள் உள்ளனர். எனவே தான், இது நாட்டின் அரசியலை மாற்றியமைக்கும் வரலாற்று மசோதாவாக பார்க்கப்படுகிறது.