புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் 6 வாயில்களையும் காக்கும் 6 மிருகங்கள்: முழு விவரம்
நாளை முதல் இந்திய சட்டமன்றம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற உள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் ஒரு சிறப்பம்சம் குறித்து இப்போது பார்க்கலாம். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மொத்தம் 6 வாயில்கள் இருக்கின்றன. இந்த 6 வாயில்களுக்கும் 6 வெவ்வேறு உயிரினங்களின் பெயரிடப்பட்டுள்ளன. இந்த உயிரினங்கள் ஒவ்வொன்றும் 140 கோடி இந்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றத்தின் வெவ்வேறு அம்சங்களைக் குறிக்கிறது. கஜ துவாரம், அஸ்வ துவாரம், கருட துவாரம், மகர துவாரம், ஷர்துலா துவாரம் மற்றும் ஹம்ச துவாரம் ஆகியவை நாடாளுமன்ற வாயில்களின் பெயர்களாகும். புதிய நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு வாயிலிலும் அந்த வாயிலின் பெயரை கொண்ட உயிரினத்தின் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.
கஜ துவாரம்
புத்தி, நினைவாற்றல், செல்வம் மற்றும் ஞானம் ஆகியவற்றைக் குறிக்கும் யானையின் பெயரான 'கஜம்' நாடாளுமன்றத்தின் முதல் வாயிலுக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த வாயில் கட்டிடத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது. வாஸ்து சாஷ்திரத்தின் படி, வடக்கு திசை புதனுடன் தொடர்புடையது. இது புத்திசாலித்தனத்திற்கான இடமாக நம்பப்படுகிறது. வாயில்களில் யானை உருவங்களை வைப்பது மிக பிரபலமான ஒரு நடைமுறையாகும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, யானை உருவங்கள் செழிப்பையும் மகிழ்ச்சியையும் தரும்.
அஸ்வ துவாரம்
அஸ்வம் என்பது குதிரைக்கான இன்னொரு பெயராகும். பொதுவாக, சக்தி, வலிமை மற்றும் தைரியத்தை குதிரை குறிக்கிறது. ஒரு அரசாங்கத்திற்கு தேவையான குணங்களாக இவை கருதப்படுகின்றன. இந்திய பாரம்பரியத்தில் குதிரைகளின் முக்கியத்துவத்தை வேத இலக்கியங்களிலும், ராமாயணம் மற்றும் மகாபாரதத்திலும் காண முடியும். 1250 CEஇல் கிழக்கு கங்கா வம்சத்தின் நரசிம்மதேவனால் கட்டப்பட்ட கோனார்க் சூரிய கோவிலில் உள்ள குதிரையின் சிற்பம் தான் அஸ்வ துவாரத்தை அமைக்க தூண்டியது.
கருட துவாரம்
மூன்றாவது வாயிலுக்கு பறவைகளின் ராஜாவான கருடனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 18ஆம் நூற்றாண்டில் , நாயக்கர் காலத்தில், தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்ட கருடனின் சிலையை குறிக்கும் வகையில் புதிய நாடாளுமன்றத்தின் மூன்றாவது வாயிலில் கருட சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. ராமாயணத்தின் படி, கருடன் இந்து கடவுள் விஷ்ணுவின் வாகனமாகும். மும்மூர்த்திகளில் பாதுகாவலரான விஷ்ணுவின் வாகனம் கருடன் என்பதால், அது சக்தி மற்றும் தர்மத்தின் சின்னமாக பார்க்கப்படுகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கிழக்கு நுழைவாயிலுக்கு தான் கருட துவாரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. பொதுவாகவே, கழுகுகளும் பருந்துகளும் அதிகாரத்தின் சின்னமாக கருதப்படுகின்றன. அதனால் தான், அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் அதிகாரபூர்வ சின்னமாக கழுகுளை வைத்திருக்கின்றன.
மகர துவாரம்
இந்திய புராணங்களின் படி, மகரம் என்பது வெவ்வேறு விலங்குகளின் கலவையான கடல் உயிரினம் ஆகும். தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பரவியுள்ள இந்து மற்றும் புத்த நினைவுச் சின்னங்களில் மகர சிற்பங்கள் காணப்படுகின்றன. வெவ்வேறு உயிரினங்களின் கலவையாக மகரம் இருப்பதால், அது இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை குறிக்கிறது. மேலும், வாசல்களில் வைக்கப்படும் மகர சிற்பங்கள் சக்திவாய்ந்த பாதுகாவலர்களாகக் கருதப்படுகின்றன. புதிய நாடாளுமன்றத்தின் மகர துவாரம் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் நுழைவாயிலை பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளது.
ஷர்துல துவாரம்
ஐந்தாவது வாயிலுக்கு 'ஷர்துலா' என்ற மற்றொரு புராண உயிரினத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த உயிரினம் சிங்கத்தின் உடலையும், குதிரை, யானை அல்லது கிளியின் தலையையும் கொண்டதாகும். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வாயிலில் ஷர்துலா இருப்பது நாட்டு மக்களின் சக்தியை குறிக்கிறது என்று அரசு குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இது வலிமை மற்றும் கருணையின் சமநிலையை பிரதிபலிப்பதாகவும் கூறப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் உள்ள குஜ்ரி மஹால் அருங்காட்சியகத்தில் இருக்கும் ஷர்துலா சிலையின் நினைவாக நாடாளுமன்றத்தின் தென்கிழக்கு பொது நுழைவாயிலுக்கு ஷர்துலா என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஹம்ச துவாரம்
அன்னப்பறவையை குறிக்கும் 'ஹம்சா' என்ற பெயர் புதிய நாடாளுமன்றத்தின் ஆறாவது வாயிலுக்கு வைக்கப்பட்டுள்ளது. அன்னப்பறவை, இந்து கடவுளான சரஸ்வதியின் வாகனமாகும். மேலும், அன்னப்பறவை மோட்சத்தை குறிக்கிறது. பிறப்பு மற்றும் இறப்பு என்ற சுழற்சியில் இருந்து ஆன்மா விடுதலை பெறுவதே மோட்சமாகும். சுய-உணர்தல் மற்றும் ஞானத்தை குறிப்பதற்காக புதிய நாடாளுமன்றத்தின் ஆறாவது வாயிலில் அன்னப்பறவையின் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.