தளபதி 69 படத்தில் இணைகிறார் ப்ரேமலு புகழ் மமிதா பைஜூ
விஜய்-யின் தளபதி 69 படத்தில் மற்றுமொரு நாயகியாக இணைந்துள்ளார் 'ப்ரேமலு' புகழ் மமிதா பைஜூ. ஏற்கனவே இன்று காலை வெளியான அறிவிப்பின் படி படத்தின் முன்னணி நாயகியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக அடுத்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தபோது, தான் ஒப்புக்கொண்ட படப்பணிகளை முடித்து விட்டு படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு, முழுவதுமாக அரசியலில் இறங்குவதாக அறிவித்தார். அதன் பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான GOAT படம் நல்ல வசூலை பெற்றது. அதன் பின்னர், யாரும் எதிர்பாரா நேரத்தில் நடிகர் விஜய்யின் 69 வது படத்திற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் திக்குமுக்காட வைத்தது.
Twitter Post
படத்தின் மற்ற விவரங்கள்
KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 69 படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார் எனவும், அனிருத் இசையமைக்கிறார் எனவும் அதன் பின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. நேற்று இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் பற்றி அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளனர். நேற்று தொடங்கி அடுத்த 3 நாட்கள் அறிவிப்பு வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனிமல் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் பாபி தியோல். இவர்களை தவிர பிரகாஷ் ராஜ், மஞ்சு வாரியார் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.