வில்லனாக நடிப்பதில் இருந்து இடைவெளி எடுக்கிறேன்- விஜய் சேதுபதி
கோவாவில் நடந்து வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், நடிகை குஷ்பூ உடன் நடந்த உரையாடலில் பேசிய விஜய் சேதுபதி, வில்லனாக நடிப்பதிலிருந்து இடைவெளி எடுப்பதாக தெரிவித்துள்ளார். திரைப்பட விழாவில், திரையிடப்பட்ட முதல் அமைதிப் படமான, காந்தி டாக்ஸ் திரைப்படத்தை அவர் பார்த்தார். அதன் பின்னர் நடந்த உரையாடலில், அவர் வாழ்க்கை குறித்த பல சுவாரசியமான சம்பவங்களை நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்து கொண்டார். "நான் இன்று காலை என் மகளிடம் பேசினேன், இன்று நான் என்ன பேசுவேன் என்று கேட்டாள். டீ எப்படி செய்வது என்று சொன்னேன்." "எனவே இதை (உரையாடலை) ஒரு வகுப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்," என்று சேதுபதி தனது தொடக்க பேச்சில் கூறினார்.
மனைவிக்கு நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, தன் மனைவி (ஜெஸ்ஸி சேதுபதிக்கு) நன்றி தெரிவித்தார். துபாயில் பணியாற்றிக் கொண்டிருந்த விஜய் சேதுபதி, ஒரு திருமணத்தில் பங்கேற்க வந்த போது காதல் வயப்பட்டு, ஜெசியை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட பின், துபாய் திரும்பிச் செல்ல மனைவி அனுமதிக்காததால், சினிமாவில் நடிக்க வந்ததாக அவர் தெரிவித்தார். அவர் நடிப்பு முறையை பற்றி பேசிய விஜய் சேதுபதி, உண்மையாகவே அவர் எந்த முறையில் நடிக்கிறார் என்பது அவருக்கு தெரியவில்லை என கூறினார். "நான் கதையின் சாராம்சத்தைப் புரிந்துகொள்கிறேன், கதையைச் சொல்லும் இயக்குனரைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் நான் எந்த சூத்திரத்தையும் பின்பற்றுவதில்லை" என இயக்குனர்களிடம் கதை கேட்பது குறித்து பேசினார்.
வில்லனாக நடிப்பதில் பல கட்டுப்பாடுகள் உள்ளன- விஜய் சேதுபதி
"அறிவு என்பது நீங்கள் யாருடன் உரையாடுகிறீர்கள் என்பதை பொறுத்தது. எனக்கு சினிமாவில் பணியாற்றும் சில சிறந்த மனிதர்களை தெரியும்" "நாம் யாருடன் தொடர்பு கொள்கிறோம் மற்றும் விஷயங்களை விவாதிப்பவர்கள் முக்கியமானவர்கள். அவர்கள் உங்கள் மூளையில் யோசனைகளை விதைக்கிறார்கள்" என்றார். திரைப்படங்களில் வில்லனாக நடித்த குறித்து பேசிய விஜய் சேதுபதி, "வில்லனாக நடிப்பதில் பல அழுத்தங்களும் கட்டுப்பாடுகளும் உள்ளன." "ஹீரோவை ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தை நிறுத்த முயற்சிக்கிறார்கள். நான் ஓய்வு எடுத்துக்கொண்டு அதற்கு பதிலாக கதாநாயகன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் கவனம் செலுத்துவேன் என்று நினைக்கிறேன்." என்று தெரிவித்தார். மேலும் அவர், சினிமாவில் நடிப்பது அவரின் குழந்தை பருவ ஆசை இல்லை எனவும், தொழிலதிபராகி அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைத்ததாகவும் கூறியுள்ளார்.