தலைவர்171 திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த விஜய் சேதுபதி?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும், தலைவர் 171 திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க, விஜய் சேதுபதி மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. லியோ படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 திரைப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார். படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானாலும், படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. லியோ திரைப்படத்திற்கு பின், குடும்பத்துடன் லோகேஷ் செல்வராஜ் நேரம் செலவிட உள்ளதாகவும், அதன் பின்னர் ஆறு மாத காலத்திற்குள் தலைவர் 171 திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்டை தயார் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தலைவர் 171 திரைப்படம் எல்சியுவில் வராது என்பதை, லோகேஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஜினிக்கு வில்லனாகும் ராகவா லாரன்ஸ்?
இப்படத்தில், ரஜினிக்கு வில்லனாக ராகவா லாரன்ஸை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் பரவி வந்தன. இதற்கு முன்னர் தலைவர் 171 திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதியை கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் விஜய் சேதுபதி, இனி எப்போதும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதில்லை என முடிவெடுத்து விட்டதால், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துள்ளார். அதேசமயம், அவர் கேட்ட சம்பளத்தை தயாரிப்பு நிறுவனம் கொடுக்க முன் வராததால், விஜய் சேதுபதி விலகியதாகவும் கூறப்படுகிறது. விஜய் சேதுபதி ஏற்கனவே ரஜினியின் பேட்ட, விஜயின் மாஸ்டர், கமலஹாசனின் விக்ரம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.