Loading...
காவிரி விவகாரத்தால் பதற்றம்! கர்நாடகாவில் நிறுத்தப்பட்டது ஜனநாயகன் திரையிடல்! விஜய் போஸ்டர்களை அகற்றிய திரையரங்குகள்
காவிரியால் கர்நாடகாவில் ஜனநாயகன் திரையிடல் நிறுத்தம்

காவிரி விவகாரத்தால் பதற்றம்! கர்நாடகாவில் நிறுத்தப்பட்டது ஜனநாயகன் திரையிடல்! விஜய் போஸ்டர்களை அகற்றிய திரையரங்குகள்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 31, 2026
03:52 pm

செய்தி முன்னோட்டம்

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் திரையிடல் கர்நாடகா முழுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தினமும் 3,500 கியூசெக்ஸ் காவிரி நீரைத் திறந்து விடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து, கன்னட அமைப்புகள் மற்றும் விவசாயிகள் கர்நாடகாவில் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

பலத்த பாதுகாப்பு

திரையரங்குகளில் போஸ்டர்கள் அகற்றம் & பலத்த பாதுகாப்பு

அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவின் சம்பிகே திரையரங்கம் உள்ளிட்ட பல திரையரங்குகளில் ஜனநாயகன் திரைப்படத்தின் அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திரையரங்க வாசல்களில் வைக்கப்பட்டிருந்த விஜய்யின் போஸ்டர்கள் அகற்றப்பட்டும், பிற போஸ்டர்களால் மூடப்பட்டும் வருகின்றன.

மேலும், மாண்டியா பகுதியில் கன்னட அமைப்பினர் திரையரங்குகளில் புகுந்து விளம்பரப் பேனர்களைக் கிழித்து எறிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

சட்ட ஒழுங்கைப் பராமரிக்கத் தமிழர்கள் அதிகம் வாழும் ஸ்ரீராம்புரா உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்ப்பு

காவிரி நீர் ஆணைய உத்தரவும் அரசுகளின் எதிர்ப்பும்

காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் பரிந்துரையை ஏற்று, அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தினமும் 3,500 கன அடி தண்ணீரைத் திறந்து விடுமாறு கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

ஆனால், கர்நாடகாவில் போதிய மழையின்றி வறட்சி நிலவுவதால் தண்ணீரைத் திறந்து விட முடியாது எனக் கூறி, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

அதேவேளையில், தமிழகத்தின் சட்டப்பூர்வ காவிரி உரிமையைப் பெற உச்ச நீதிமன்றத்தை அணுகவுள்ளதாகத் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

பின்னடைவு

வசூலில் பின்னடைவை சந்திக்கும் ஜனநாயகன்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம், உலகளவில் இதுவரை ₹260 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

விஜய்யின் முழுநேர அரசியல் வருகைக்கு முன்பான கடைசித் திரைப்படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற போதிலும், கர்நாடகாவில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் படத்தின் வசூல் கணிசமாகப் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழல் குறித்து ஆலோசிக்கக் கர்நாடகத் திரைப்பட வர்த்தக சபை அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

ADVERTISEMENT