வீரயுக நாயன் வேள்பாரி காப்பிரைட் சர்ச்சை; இயக்குனர் ஷங்கர் பகிரங்க எச்சரிக்கை
வீரயுக நாயகன் வேள்பாரி நாவல் குறித்து இயக்குனர் ஷங்கர் பகிரங்க எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதைத் தொடர்ந்து இந்தியன் 3 மற்றும் கேம் ஜேஞ்சர் ஆகிய படங்களில் ஷங்கர் தீவிரமான பணியாற்றி வருகிறார். இந்நிலையில், எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், சு.வெங்கடேசனின் வரலாற்றுப் புதினமான வீரயுக நாயகன் வேள்பாரியின் காப்புரிமையைக் வைத்துள்ளவர் என்ற முறையில், பல திரைப்படங்களில் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதைக் கண்டு கலங்கியதாகவும், சமீபத்தில் வெளியான ஒரு திரைப்பட டிரெய்லரில் நாவலின் முக்கியமான காட்சி பயன்படுத்தப்பட்டு உள்ளது வருத்தமளிப்பதாகவும் கூறியுள்ளார்.
படைப்பாளிகளின் உரிமைகளை மதிக்குமாறு வலியுறுத்தல்
இயக்குனர் ஷங்கர் திரைப்படங்கள், வெப் சீரீஸ் மற்றும் வேறு எந்த ஊடகத்திலும் நாவலின் காட்சிகளைப் பயன்படுத்துவதை தயவுசெய்து தவிர்க்குமாறும், படைப்பாளிகளின் உரிமைகளை மதிக்குமாறும் வலியுறுத்தி உள்ளார். மேலும், உரிய அனுமதி பெறாமல் நாவலின் காட்சிகளை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். சமீபகாலமாக வரலாற்று ரீதியிலான படங்களை எடுக்க தமிழ் சினிமா இயக்குனர்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், இயக்குனர் ஷங்கரும் வேள்பாரியை படமாக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலே காப்பி தான் என்றும், அவருக்கு முன்னர் பலர் எழுதி வைத்திருந்த கதையைத்தான் வேள்பாரி நாவலாக உருவாக்கியதாக அவரே புத்தக வெளியீட்டு விழாவின்போது கூறியதாக, சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.