"வயது முதிர்ந்த காலத்தில் நம்மை நாமே பராமரித்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்": கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து சமீபத்தில் அரசு விழா ஒன்றில் கலந்து கொண்டார். தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டியில், மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்முறையாக துவங்கப்பட்ட புத்தக திருவிழாவிற்கு தலைமை தாங்க வந்திருந்தார். நேற்று மகளை தினமாகையால், கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். தன்னுடைய முதல் புத்தகத்தை பற்றி பேசிய வைரமுத்து, "நான் முதன்முதலில் வாசித்த புத்தகம், ஏழைபடும் பாடு என்ற பிரெஞ்ச் மொழி பெயர்ப்பு நாவலாகும். தேனி அருகே உள்ள கரட்டுப்பட்டியில் லாந்தர் வெளிச்சத்தில் இரவில் படிக்க தொடங்கிய நான் அதிகாலை சேவல் கூவும் நேரத்தில் வாசித்து முடித்தேன். அன்று என் நெஞ்சில் ஏற்பட்ட புத்தக வாசிப்பு என்ற நெருப்பு எனது 70 வயதிலும் எரிமலையாக எழுந்து நிற்கிறது" எனக்கூறினார்.
வைரமுத்துவின் பேச்சு
கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேசிய வைரமுத்து
"பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழை வாசிக்கவும், எழுதவும், பேசவும், படிக்கவும், பாரம்பரியத்தை அறிந்து கொள்ளவும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். அவர்களுக்கு சொத்து சேர்த்து வைப்பதை விட நல்ல புத்தகங்களை சேர்த்து வையுங்கள்" என புத்தகவாசிப்பின் முக்கியத்துவத்தை பற்றி அவர் மேலும் கூறினார். "இந்த யுகத்தில் தகுதியுள்ளவர்கள் மட்டுமே தப்பி பிழைக்க முடியும். கற்றவன், கல்லாதவன் என்ற நிலையானது தற்போது தொழில்நுட்பம் கற்றவன், தொழில்நுட்பம் கல்லாதவன் என்று மாறியுள்ளது. வயது முதிர்ந்த காலத்தில் நம்மை நாமே பராமரித்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இதற்கு தயாராக உள்ளவர்கள் மட்டுமே வாழ முடியும்" எனக்கல்வியின் மகத்துவத்தை, வைரமுத்து வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.