விடுதலை 2 ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி; வெளியீட்டிற்கு முன்னர் குறைக்கப்பட்ட காட்சிகள்
வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டவர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து நாளை வெளியாகவுள்ள விடுதலை 2 படத்திற்கு தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதியளித்துள்ளது. கோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே சிறப்பு காட்சி கோரப்பட்ட நிலையில் முதன்முறையாக காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக நடித்து வரும் சூரியின் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது சிறப்பு. 'வாத்தியார்' என்கிற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க, அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார். முதல் பாகத்தில் வாத்தியாரின் அறிமுகம் இருந்தது. இதில் அவரது வாழ்க்கை பற்றிய தகவல்கள் வெளிப்படுத்தப்படும் எனவும் அவர் ஏன் போராளியாக மாறினார் எனவும் கூறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியீட்டிற்கு முன்னர் படத்தில் காட்சிகள் நீக்கம்
விடுதலை 2 நாளை வெளியாகவுள்ள நிலையில் கடைசி நிமிட அப்டேட்டாக சுமார் 8 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்தார். படத்தின் நீளம் கருதி இந்த காட்சிகள் நீக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். விடுதலை முதல் பாகத்தை போலவே, விடுதலை 2 திரைப்படமும் A தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி தவிர பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யாப், பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜீவ் மேனன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இளையராஜா இசையமைத்துள்ளார்.