டைகர் ஷெராப் துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹரியானாவை சேர்ந்த இளம் பெண் கைது
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு வழக்கில், ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தை சேர்ந்த சுபேகா பண்டிட் என்ற இளம்பெண்ணை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி ஜூகு பகுதியில் டைகர் ஷெராப் காரில் சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில், நடிகர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது ஓட்டுநரும் ஒரு ரசிகரும் காயமடைந்தனர். பாலிவுட்டின் 'ஒரே டைகர் சல்மான் கான் மட்டுமே' என டைகர் பேசியதற்காகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
13 பேர் கைது
ஆயுத சப்ளையில் சிக்கிய பெண்கள்
இவ்வழக்கில் ஏற்கனவே ராஜஸ்தான் மற்றும் டெல்லி, ஹரியானாவை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது கைதான சுபேகா பண்டிட்டுடன் சேர்த்து மொத்த எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
ஆயுதங்களை சப்ளை செய்ததாக கைதாகும் 3-வது பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அக்டோபர் 27-ஆம் தேதி இந்த வழக்கில் கடுமையான 'மக்கோகா' சட்டப் பிரிவுகளை சேர்த்துள்ளனர்.
இவ்வழக்கின் 12-வது குற்றவாளியை சிறப்பு நீதிமன்றம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளதால், ஆயுதக் கடத்தல் நெட்வொர்க் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுநிகழ்ச்சி
வதந்திகளுக்கு டைகர் தரப்பு மறுப்பு
தாக்குதல் சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் டைகர் ஷெராப் பங்கேற்க உள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
ஆனால், இந்தத் தகவலை மறுத்துள்ள அவரது செய்தித் தொடர்பாளர், "டைகர் ஷெராப் பொதுநிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக பரவும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் உண்மையில்லை" என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
துப்பாக்கி குண்டு சிதறியதில் கையில் தீக்காய தழும்புகளுடன் இருக்கும் வீடியோ வெளியான நிலையில், நடிகர் டைகர் ஷெராப் பொதுவெளியில் தோன்றாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து வருகிறார்.