திருமணம் செய்துகொண்டதை உறுதி செய்த நடிகை தாப்ஸி;"ஆனால் புகைப்படங்களைப் பகிரும் திட்டமில்லை"
மார்ச் 22 அன்று உதய்பூரில் நடந்த நடிகை தாப்ஸியின் திருமண புகைப்படங்களுக்காக அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்க, புகைப்படங்களை வெளியிடும் எண்ணம் தனக்கு இல்லை என கூறியுள்ளார் தாப்ஸி. தாப்ஸி தனது காதலரான பேட்மிண்டன் பயிற்சியாளர் மத்தியாஸ் போவை கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டார். இந்த நிகழ்விற்கு இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவுகளும், நட்புகளும் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். திரையுலக செலிபிரிட்டிகளோ, ஊடகத்துறையினரோ அழைக்கப்படவில்லை. இவரின் திருமண நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்திருந்தாலும், அவற்றை அதிகாரபூர்வமாக வெளியிடும் எண்ணம் தனக்கில்லை என தாப்ஸி தெரிவித்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
'பொது வாழ்க்கைக்காக நான்தான் கையெழுத்திட்டேன், என் துணைக்கு அல்ல...'
சமூக ஊடகங்களில் திருமணப் படங்களைப் பகிர்வது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் கேள்வி எழுப்பியபோது, தாப்ஸி,"ஒரு பொது நபர் திருமணம் செய்து கொள்ளும்போது நடக்கும் ஆய்வில் எனது தனிப்பட்ட வாழ்க்கையையும், அதில் ஈடுபட்டுள்ள நபர்களையும் நான் அனுமதிக்க விரும்பவில்லை". "பொதுவாழ்க்கைக்கு நான் மட்டும்தான் கையெழுத்திட்டேன், என் பார்ட்னர் அல்ல... நான் எப்படி உணர்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை... அதனால்தான் நான் அதை என்னுடனேயே வைத்துக்கொண்டேன்" "அதை இப்போதே வெளியிட நான் மனதளவில் தயாராக இல்லை என்று நினைக்கிறேன்." "எதிர்காலத்தில், நான் அதைப் பற்றி (திருமண விவரங்கள்) பகிர்ந்து கொள்ள தயாராக இருந்தால், எப்படி, என்ன, எப்போது, இதனை வெளியிட வேண்டும் என்பதை அப்போது முடிவெடுக்கலாம்" என்றார்