'சீன்' திரைப்படம் மலையாள சினிமாவுக்கான எங்களின் சிறிய காதல் கடிதம்: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி பதிவு
செய்தி முன்னோட்டம்
மலையாளத்தில் ஆவேசம், ரோமன்சம் ஆகிய மெகா ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியான சீன் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வசூல் மழை பொழிந்து வருகிறது. கடந்த நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், வெறும் 8 நாட்களில் உலகளவில் ₹211 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து இமாலய சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த மலையாள நடிகர் டொவினோ தாமஸ் மற்றும் ஒட்டுமொத்த மலையாளத் திரையுலகினருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
டொவினோ தாமஸ்
மலையாளக் கலைஞர்களுக்கு சூர்யா புகழாரம்
சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், சூர்யா ஒரு வித்தியாசமான காவல்துறை அதிகாரியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
நஸ்ரியா ஃபஹத், நஸ்லன், லால், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த நிலையில், மலையாள முன்னணி நடிகர் டொவினோ தாமஸ் விக்டர் எனும் கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துத் திரையரங்குகளை அதிரவைத்துள்ளார்.
இதனைப் பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூர்யா, "அன்புள்ள டொவினோ, எங்களின் விக்டராக இருந்ததற்கு உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.
மிகுந்த அன்போடும் தாராள மனதோடும் நீங்கள் இணைந்துகொண்டது வார்த்தைகளால் விவரிக்க முடியாத நெகிழ்ச்சியை அளிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
211 கோடி வசூல்
மலையாள சினிமாவுக்கான அர்ப்பணிப்பு
தனது பதிவில் மேலும் தொடர்ந்துள்ள சூர்யா, "'சீன்' திரைப்படத்தில் எங்களுடன் இணைந்து பணியாற்றிய மலையாளத் திரையுலகைச் சேர்ந்த சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இது மலையாள சினிமாவுக்கு எங்களின் சிறிய காதல் கடிதம்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சுஷின் ஷ்யாமின் துள்ளலான இசையும், ஜித்து மாதவனின் விறுவிறுப்பான திரைக்கதையும் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளதால், 8 நாட்களில் ₹211 கோடியைக் கடந்துள்ள 'சீன்' திரைப்படத்தின் வசூல், வார இறுதி நாட்களில் மேலும் புதிய உச்சங்களைத் தொடும் எனத் திரையுலக வட்டாரங்கள் கணித்துள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Dear @ttovino , I can’t thank you enough for being our Victor. The love and generosity with which you came on board means more to me than words can express. ❤️
— Suriya Sivakumar (@Suriya_offl) November 14, 2026
And to all my wonderful co actors, technicians and creative minds from the Malayalam film industry, thank you for being… pic.twitter.com/85pzYhGCbp