AI மூலமாக ஒலிக்கவிருக்கும் சூர்யாவின் குரல்; கங்குவா திரைப்படத்தில் சர்ப்ரைஸ்
நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கங்குவா விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக, கங்குவாவிற்கு நடிகர் சூர்யாவின் குரல் AI பயன்படுத்தி பல மொழிகளில் டப் செய்யப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்திய உரையாடலின் போது உறுதிப்படுத்தினார். X விவாதத்தில் தயாரிப்பாளர் KE ஞானவேல் ராஜா கலந்து கொண்டு, "தமிழ் பதிப்பிற்கு சூர்யா டப்பிங் செய்கிறார், ஆனால் மற்ற மொழிகளுக்கு AI ஐப் பயன்படுத்துவோம். இது கோலிவுட்டுக்கு புதிய இடத்தைக் குறிக்கிறது. சமீபத்தில், வேட்டையன் தயாரிப்பாளர்கள் அமிதாப் பச்சனின் குரலுக்கு இதே போன்ற ஒன்றை செய்தனர். சீன மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் படத்தை வெளியிட விரும்புவதால் இது வெற்றி பெறும் என்று நம்புகிறோம்" என்றார்.
பட வெளியீடு, இசை வெளியீடு உள்ளிட்ட விவரங்கள்
கங்குவா படம் உலகம் முழுவதும் 3500 திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் உறுதி அளித்துள்ளார். கங்குவா வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகிறது. முன்னதாக அக்டோபர் வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வேட்டையன் படத்தின் வெளியீட்டிற்காக இதனை ஒத்தி வைப்பதாக அறிவித்தனர். இந்த சூழலில் கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ் உள்ளிட்ட எட்டு மொழிகளில் கங்குவா வெளியாகிறது. இப்படத்தில், பாபி தியோல், திஷா பதானி, ஜகபதி பாபு, 'நட்டி' நடராஜ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.