சிவாஜி- MGR நட்பு: திரையில் போட்டியாளர்கள்; நிஜத்தில் இணைபிரியா நண்பர்கள்
இன்று சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாள். இந்த நாளில் அவருடைய அபார நடிப்பு திறமையை பற்றியும், அவரது விருந்தோம்பல் பண்பினையும் பலரும் சிலாகித்து வரும் நேரத்தில், அவர் சமகால நடிகரான MGR உடன் கொண்டிருந்த நட்பை பற்றி ஒரு பார்வை. சினிமாவில் ஒரே காலக்கட்டத்தில் அறிமுகம் ஆகி, இரு பெரும் துருவங்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்த நண்பர்களாக விளங்கியவர்கள், சினிமா துறையின் மாபெரும் சிகரங்களாக பார்க்கப்பட்ட MG ராமசந்திரன் மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோர். சினிமாத்துறையில் அறிமுகம் ஆகும் முன்னரே இருவருக்கும் பழக்கம் உண்டு என சிவாஜி கணேசன் 'கதாநாயகனின் கதை' என்ற புத்தகத்தில் கூறியுள்ளார்.
சேர்ந்தே வளர்ந்த இரு பெரும் நட்சத்திரங்கள்
"'மதுரை ஸ்ரீபாலகான சபா' சென்னையில் முகாமிட்டிருந்த சமயம். நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் தான் சகோதரர் எம்.ஜி.ஆர்.,வீடு இருந்தது. காலையிலும், நாடகம் முடிந்த பின்பும் மற்றும் ஓய்வு நேரங்களிலும் அவரது வீட்டிற்குச் செல்வேன். அவரது அம்மா, என்னையும் ஒரு மகனாக எண்ணி பழகியதை, என்னால் மறக்க முடியாது." "தினமும் காலையில் உடற்பயிற்சி செய்து, குளித்து, எனக்காக காத்திருப்பார் எம்.ஜி.ஆர்., நான் சென்றதும், இருவரும் அருகருகே அமர்ந்த பின்தான், அவரது அம்மா எங்களுக்கு காலை சிற்றுண்டியை பரிமாறுவார்"என MGR-உடன் தனது பால்யகாலத்து நட்பை பற்றி கூறி இருந்தார் சிவாஜி. MGR-இன் 'உலகம் சுற்றும் வாலிபன்' திரையிடுவதில் அரசியல் சிக்கல் ஏற்பட்டபோது, அன்றைய முதலமைச்சர் கருணாநிதியை எதிர்த்து, தன்னுடைய திரையரங்கில் வெளியிட்டாராம் சிவாஜி.