Page Loader
தமிழ்நாட்டில் ஷங்கரின் கேம் சேஞ்சர் வெளியாவதில் சிக்கல்
'கேம் சேஞ்சர்' தமிழகத்தில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் ஷங்கரின் கேம் சேஞ்சர் வெளியாவதில் சிக்கல்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 06, 2025
03:13 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரண் உடன் இணைந்து இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகவுள்ள திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், படத்தை தமிழகத்தில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 'இந்தியன் 3' படத்தை முடித்து கொடுக்காமல் தமிழ்நாட்டில் இப்படத்தை வெளியிடக்கூடாது என லைகா நிறுவனம் திரைத்துறை கூட்டமைப்பிடம் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியன் 2 படத்தில் மாபெரும் நஷ்டத்தை சந்தித்த நிலையில், தற்போது இந்தியன் 3 படத்திற்கு ஷங்கர் மேலும் ₹65 கோடி பட்ஜெட் கேட்பதாகவும், 'இந்தியன் 2ல் கடும் நஷ்டம் ஏற்பட்டதால், அவ்வளவு தொகை கொடுக்க முடியாது' என லைகா தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நான்கு நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

விவரங்கள்

கேம் சேஞ்சர் படத்தை பற்றி விவரங்கள் 

முன்னணி வேடத்தில் ராம் சரண் நடிக்க, SJ.சூர்யா வில்லனாக நடிக்கும் இந்த திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, ஜெயராம் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் ராம்சரண் இரு வேடங்களில் நடிக்கிறார். IPS அதிகாரியாகவும், IAS அதிகாரியாகவும் சமூக மாற்றத்திற்காக போராடும் வேடத்தில் அவர் நடிப்பதை ட்ரைலர் வெளிப்படுத்துகிறது. தமன் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டதால், படத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது. ஷங்கரின் இயக்கத்தில் வெளியான இந்தியன்-2 தோல்வியை தழுவியதால், இப்படத்தின் மூலம் அவர் மீண்டும் தன்னுடைய வெற்றியை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். எனினும் தற்போது எழுந்துள்ள சிக்கலில் இருந்து ஷங்கர் மீள்வாரா?