முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்க இருக்கிறது சவுதி அரேபியா
வரலாற்றில் முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸில் பங்கேற்க இருப்பதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. ரியாத்தைச் சேர்ந்த 27 வயதான மாடல் மற்றும் சமூக ஊடக ஆளுமை, ரூமி அல்கஹ்தானி சவுதி அரேபியாவை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார். திங்களன்று இந்த செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அல்கஹ்தானி, "மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவுதி அரேபியாவின் முதல் பங்கேற்பு இது." என்று தெரிவித்தார். அல்கஹ்தானி, உலகளாவிய அழகுப் போட்டிகளில் கலந்துகொள்வது இது முதல் முறையல்ல. அவர் இதற்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற மிஸ் & மிஸஸ் குளோபல் ஏசியன் நிகழ்வு போன்ற போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
பல பட்டன்களை வென்ற ரூமி அல்கஹ்தானி
மிஸ் சவுதி அரேபியா, மிஸ் மிடில் ஈஸ்ட் (சவுதி அரேபியா ), மிஸ் அரபு உலக அமைதி 2021 மற்றும் மிஸ் வுமன் (சவுதி அரேபியா) உள்ளிட்ட பல பட்டங்களை இவர் பெற்றுள்ளார். "உலக கலாச்சாரங்களைப் பற்றி அறிந்துகொள்வதும், நமது உண்மையான சவுதி கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு தெரியப்படுத்துவம் எனது பங்களிப்புகளாகும்" என்று அவர் அரபு செய்தியிடம் பேசும் போது தெரிவித்தார். மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவுதி அரேபியா கலந்து கொள்வது, அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் தலைமையிலான அரசாங்கம் செய்த பல சீர்திருத்தங்களில் ஒன்றாகும்.