ஆஸ்கார் 2025 இறுதிப்போட்டிக்கு தேர்வான படங்களின் பட்டியல் வெளியானது; இந்திய திரைப்படங்கள் எதுவும் தேர்வாகவில்லை
அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ், இன்று புதன்கிழமை ஆஸ்கார் 2025 பந்தயத்திற்கு தகுதியான படங்களின் பெயர்களை வெளியிட்டது. இதில் இந்தியாவிலிருந்து அனுப்பட்ட லாபட்டா லேடீஸ் திரைப்படம் இடம்பெறவில்லை. எனினும் மற்றொரு ஹிந்தி மொழி திரைப்படம் இடம்பெற்றுள்ளது. சந்தோஷ் எனப்பெயரிடப்பட்ட அந்த படம் சர்வதேச இணை தயாரிப்பாகும். வட இந்தியாவின் கிராமப்புறங்களில் நடைபெறும் கதைக்களம் கொண்ட இந்த ஹிந்தி மொழி திரைப்படம், 'சிறந்த சர்வதேச திரைப்படம்' பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஷஹானா கோஸ்வாமியின் சந்தோஷ், 2025 ஆஸ்கார் விருதுகளில் சிறந்த சர்வதேச அம்சத்திற்கான ('Best International Feature Film') தேர்வுப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
என்று இறுதி முடிவு அறிவிக்கப்படும்?
உலகெங்கிலும் உள்ள நாடுகள் சமர்ப்பித்த மொத்த 85 படங்களில், மொத்தம் 15 படங்கள் இந்தப் பிரிவில் ஆஸ்கார் விருதுப் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அகாடமி விருதுகள் 2025 க்கான அதிகாரப்பூர்வ சமர்ப்பிப்பாக இந்த திரைப்படம் ஐக்கிய இராச்சியத்தால் அனுப்பப்பட்டது. இந்தத் திரைப்படம் மே 2024 இல் 77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது, மேலும் விமர்சகர்களால் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆஸ்கார் விருதுக்கான அனைத்து 23 பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டவர்களைத் தீர்மானிக்க ஆஸ்கார் வாக்களிப்பு நடைமுறை ஜனவரி 8 புதன்கிழமை தொடங்கி ஜனவரி 12 ஞாயிற்றுக்கிழமை முடிவடையும். இறுதி முடிவுகள் ஜனவரி 17, வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்.