நடிகர் சல்மான் கான் வீடு மீது துப்பாக்கி சூடு நடத்தினால், ₹ 4 லட்சம் பரிசு: போலீஸ் விசாரணையில் அம்பலம்
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, மும்பையில் நடிகர் சல்மான் கான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அந்த இருவரையும் காவல்துறையினர் மேற்கு வங்காளத்தில் கைது செய்தனர். இந்த நிலையில், மற்றொரு சந்தேக நபர், புதன்கிழமை இரவு ஹரியானாவில் கைது செய்யப்பட்டார். போலீஸ் ஆதாரங்களின்படி, இந்த நபர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கும், தற்போது துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் இடையே ஒரு தொடர்பாளராக பணியாற்றியவர். போலீஸ் வட்டாரங்களின்படி, இருவருக்கும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக ₹4 லட்சம் தரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத் தொகையாக ₹ 1 லட்சம் முன்கூட்டியே வழங்கப்பட்டது.
சல்மான் கானை அச்சுறுத்துவதே நோக்கம்
மும்பை குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறியது போல், உத்தேசிக்கப்பட்ட நோக்கம் சல்மான் கானை கொலை செய்வது அல்ல. அவரை அச்சுறுத்துவதே நோக்கம். "குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரை பயமுறுத்தவே அப்படி செய்துள்ளனர். கொலை செய்வது அவர்களின் நோக்கமல்ல. ஹரியானா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சுமார் 7 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்" என்று மும்பை குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாக, செய்தி நிறுவனமான ANI மேற்கோள் காட்டியது. இந்த வழக்கில் மும்பை குற்றப்பிரிவும் சல்மான் கானின் வாக்குமூலத்தை ஒரு சாட்சியாக பதிவு செய்ய உள்ளது. நேற்று மதியம், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சல்மான் கானை சந்தித்து அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.