பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தள்ளிவைக்கப்படுகிறதா?
தமிழ் சினிமாவின் பெருமை என்று சொல்ல கூடிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன. இந்த படம், ஏப்ரல் 28, 2023 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில், படத்தை அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பதாகவும், சில போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் மிச்சம் இருப்பதாகவும், அதனால் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்க போவதாகவும் செய்திகள் எழுந்தது. இதனால், பொன்னியின் செல்வன் ரசிகர்கள் மிகுந்த குழப்பத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், இன்று ட்விட்டரில், பொன்னியின் செல்வன் குறிப்பிட்ட தேதியில் தான் வெளிவரும் எனவும், ஒத்திவைப்பு குறித்த தகவல்கள் அனைத்தும் வதந்தி எனவும் செய்திகள் வெளியாக தொடங்கின.
500 கோடிகளை வசூலித்த PS 1
இந்த இரு செய்திகளுக்கும், மணிரத்னம் தரப்பில் இருந்தோ, தயாரிப்பாளர் தரப்பில் இருந்தோ, எந்த விளக்கமும் தரப்படவில்லை. அமரர் கல்கி எழுதிய வரலாற்று புதினத்தின் தழுவலாக எடுக்கப்பட்ட இந்த பொன்னியின் செல்வன், புதினத்தின் ஐந்து பாகங்களை சுருக்கி, இரண்டு பாக திரைப்படமாக எடுத்திருந்தார் மணிரத்னம். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசை A.R. ரஹ்மான். இந்த படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பிரகாஷ் ராஜ் மற்றும் பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். படத்தின் முதல் பாகம், உலகம் முழுவதும் 500 கோடிகளை வசூலித்தது எனக்கூறப்பட்டது.