ஆண்டு இறுதி 2024: கோலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாகிய விவகாரத்துகளும் மோதல்களும்
செய்தி முன்னோட்டம்
தமிழக திரையுலகம் இந்தாண்டு பல ஆச்சரியப்படுத்திய படைப்புக்களை வழங்கியுள்ளது.
மகாராஜா, லப்பர் பந்து உள்ளிட்ட சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகி உலகளவில் மாபெரும் வெற்றியை பெற்றது.
அதே நேரத்தில் அதிகம் செலவு செய்து, பிரமாண்ட படைப்பாக வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யமுடியாமல், விமர்சனரீதியாக அடி வாங்கிய படங்களும் உள்ளது.
அதே போல, திரையுலகின் பல எலிஜிபிள் நட்சத்திரங்கள் பல வருட காத்திருப்பிற்கு பின்னர் திருமண பந்தத்தில் இணைந்தனர்.
சிலர் திருமண முறிவையும் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தனர். ஒரு சிலர் நீண்டகாலமாக நிலவிய பனிப்போரை பொதுவெளியில் அறிவித்தும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இந்த 2024 நிறைவடையும் இந்த தருணத்தில் கோலிவுட்டை உலுக்கிய சர்ச்சைகளையும், விவகாரத்துகளை பற்றியும் ஒரு பார்வை!
ஏ.ஆர்.ரஹ்மான்
சாய்ரா பானுவை விட்டு பிரிந்த ஏ.ஆர்.ரஹ்மான்
நவம்பர் 21 அன்று ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு வெளியிட்ட பிரிவினை பற்றிய அறிக்கை 2024 இன் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது.
AR ரஹ்மான் எப்போதுமே மிகவும் தொழில்முறை மற்றும் வேலை மற்றும் குடும்பத்தில் கவனம் செலுத்துபவர் என்று அறியப்படுபவர்.
அவர் திரையுலகில் கால் வைப்பதற்கு முன்பிருந்தே அவரைப் பற்றி எந்த ஒரு சர்ச்சையோ எதிர்மறையான செய்தியோ வந்ததில்லை.
அதனால் தொழில்துறையில் மட்டுமல்ல, ரசிகர்களும் கூட அவரை உயர்வாக மதிக்கிறார்கள்.
சினிமாவில் அவருடைய 32 வருட பயணத்தில் எண்ணற்ற விருதுகள் மற்றும் பாராட்டையும் பெற்ற இசைப்புயலின் வாழ்க்கையில் இப்படி ஒரு புயல் வீசும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
நயன்தாரா
நயன்தாரா-தனுஷ் மோதல்
நவம்பரில் நடந்த மற்றொரு பெரிய சம்பவத்தில், திரையுலகில் உள்ள தனது சக நடிகர் ஒருவரைப் பற்றி மிகவும் இழிவான அறிக்கை ஒன்று நயன்தாராவிடமிருந்து வந்தது.
லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும், நயன்தாரா, தனுஷ் உடனான தன்னுடைய மோதலை பகிரங்கமாக 2 பக்க கடிதம் மூலம் பொதுவெளியில் தெரியப்படுத்தினார்.
அவரது கடிதத்தை பொதுவெளியில் இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்தும், பலரது மனதில் இருந்த ஒரு கேள்வி - இந்தப் பிரச்சினையை பொதுவில் பேசவேண்டுமா? என்பதுதான்.
அதன் பின்னர் அது சட்ட பிரச்சனையாக தற்போது மாறியுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப்படத்தில் தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரௌடி தான் படத்தின் கிளிப்ஸ்-ஐ பயன்படுத்துவதில் இந்த சிக்கல் தொடங்கி இருக்க வாய்ப்பில்லை என்பதே பலரின் கருத்தாக இருந்தது.
ஜெயம் ரவி
ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து
கோலிவுட்டின் மற்றொரு பிரபல ஜோடியும் திருமணத்தை முறித்து கொள்ளப்போவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பலரும் ஆதர்ஷ தம்பதிகள் என புகழ்ந்த ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதி விவாகரத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதாக அறிவித்தனர்.
விவகாரத்தின் பின்னணியாக ஜெயம் ரவி பல காரணங்களை தெரிவித்தாலும், இருவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் இன்னமும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்த நேரத்தில் தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பரஸ்பர விவகாரத்தை வழங்குவதாக குடும்பநல நீதிமன்றம் அறிவித்தது.
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் முடிவில் விவகாரத்தை வழங்குவதாக அறிவித்தது நீதிமன்றம்.