Loading...
பிரம்ம முகூர்த்தத்தில் வெளியான 'ராமாயணம்' டிரெய்லர்;  ராவணனாக யாஷ், ராமராக ரன்பீர் கபூர் அசத்தல்

பிரம்ம முகூர்த்தத்தில் வெளியான 'ராமாயணம்' டிரெய்லர்;  ராவணனாக யாஷ், ராமராக ரன்பீர் கபூர் அசத்தல்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 30, 2026
08:01 am

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை தயாரிப்பாளர்கள் இன்று அதிகாலை 4:15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிட்டுள்ளனர். பிரம்மாண்டமான காட்சிகளுடன் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது உலகளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 4 நிமிடங்கள் 9 வினாடிகள் கொண்ட இந்த டிரெய்லரில், நடிகர் யாஷ் 'ராவணன்' கதாபாத்திரத்தில் தோன்றி, "மூன்று உலகங்களுக்கும் ஒரே ஒரு ராஜா தான் இருப்பான்" என்று முழங்கும் அதிரடி காட்சிகளுடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, தர்மத்தை நிலைநாட்ட அவதரிக்கும் 'ராமராக' ரன்பீர் கபூர் குதிரையேறி வரும் காட்சிகளும், அயோத்தி மன்னர் தசரதராக அருண் கோவில் மற்றும் கைகேயியாக லாரா தத்தா ஆகியோரின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

முக்கிய கதாபாத்திரங்கள்

சீதையாக சாய் பல்லவி மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள்

நடிகை சாய் பல்லவி 'சீதை' கதாபாத்திரத்தில் தனது அமைதியான கம்பீரத்துடன் தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.

டிரெய்லரில் அவரது இந்தி உச்சரிப்பும், கதாபாத்திரத்தின் தன்மையும் இயல்பாக அமைந்துள்ளது.

மேலும், லட்சுமணனாக ரவி துபே, சூர்ப்பனகையாக ரகுல் பிரீத் சிங் ஆகியோருடன் விவேக் ஓபராய், சௌரப் சச்தேவா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

டிரெய்லரின் பின்னணி இசை காட்சிகளின் பிரம்மாண்டத்தை மேலும் உயர்த்திக் காட்டுகிறது.

'ராமாயணம் பாகம் 1' திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ADVERTISEMENT