ஆஸ்கார் ரேஸில் ராமாயணம் 1 திரைப்படம்? அகாடமி விதிகள் சொல்வது என்ன?
செய்தி முன்னோட்டம்
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உலகமெங்கும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் பிரம்மாண்டத் திரைப்படமான 'ராமாயணம் 1', வரும் 2027 மார்ச் 14 அன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள 99-வது ஆஸ்கார் விருதுகளுக்கான பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுக்கான காலக்கெடுவான செப்டம்பர் 7-ஆம் தேதியைத் தவறவிட்ட போதிலும், ஆஸ்கார் அகாடமி நிர்ணயித்துள்ள கடுமையான சர்வதேசத் தகுதி வரம்புகளை இப்படம் நிறைவு செய்துள்ளதால், பொதுப் பிரிவில் நேரடியாகப் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
அகாடமி விதிகள்
அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ் சாதனை
ஆஸ்கார் விதிகளின்படி, 40 நிமிடங்களுக்கு மேற்பட்ட ஒரு திரைப்படம் தகுதி பெற அமெரிக்காவின் 6 முக்கியப் பெருநகரங்களில் ஏதேனும் ஒன்றில் உள்ள திரையரங்குகளில் வணிக ரீதியாகத் திரையிடப்பட வேண்டும்.
சோனி பிக்சர்ஸ் மூலம் வட அமெரிக்காவில் 1,000-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான 'ராமாயணம் 1', முதல் வார இறுதியில் 12.25 மில்லியன் டாலர்களை (சுமார் ₹114.89 கோடி) குவித்து சாதனை படைத்தது.
மேலும் திங்கட்கிழமையன்று 1.37 மில்லியன் டாலர் வசூலித்து, அமெரிக்காவில் அதிக வசூல் ஈட்டிய இந்தியப் படம் என்ற புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.
தொடர்ந்து 7 நாட்களுக்கு குறையாமல் தினமும் மூன்று காட்சிகளாக திரையிடப்பட வேண்டும் என்ற விதியையும், பன்முக பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தும் 'RAISE' தரநிலைகளையும் இப்படம் எளிதாகப் பூர்த்தி செய்துள்ளது.
ஆஸ்கார் களம்
இந்தியப் படங்களின் ஆஸ்கார் வரலாறு
முன்னதாக ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் நேரடி பிரிவில் களமிறங்கி 'நாட்டு நாட்டு' பாடலுக்காக ஆஸ்கார் வென்று வரலாறு படைத்தது.
அதேபோல தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ், பீரியட் எண்ட் ஆஃப் சென்டென்ஸ் ஆகிய ஆவணப்படங்களும் விருதுகளை வென்றுள்ளன.
இந்தியாவின் அதிகாரப்பூர்வ பரிந்துரைகளாக மதர் இந்தியா, சலாம் பாம்பே, லகான் ஆகிய படங்கள் மட்டுமே இறுதிபரிந்துரை வரை சென்றுள்ளன.
இம்முறை இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக மராத்தி திரைப்படமான கோந்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச பட விழாவில் விருது வென்ற கொன்யாக் மொழிப் படமான ஆங் படமும் சர்வதேச பிரிவுக்குத் தகுதி பெற்றுள்ளது.
இதனிடையே, டிசம்பர் 15 அன்று குறும்பட்டியலும், 2027 ஜனவரி 21 அன்று இறுதிப் பரிந்துரைகளும் அறிவிக்கப்படவுள்ளன.