பெண் குழந்தைக்கு அப்பாவானார் தெலுங்கு நடிகர் ராம் சரண்
'மகதீரா', 'RRR' போன்ற படங்களில் நடித்து மக்களின் மனதை கொள்ளயடித்த நடிகர் ராம் சரணுக்கு இன்று(ஜூன் 20) பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண், தனது மனைவி உபாசனா கொனிடேலாவை கடந்த 2012ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை பெற்று கொள்வதற்கு 'நோ' சொல்லி வந்த இந்த பிரபல தம்பதிக்கு குழந்தை பிறக்க போகும் தகவல் கடந்த டிசம்பர் மாதம் தான் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இன்று அவர்களுக்கு குழந்தை பிறந்துவிட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் நடிகர் சிரஞ்சீவி, "வெல்கம் குட்டி மெகா இளவரசி!!" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.