கலைஞர் வசனத்தில் நடிக்க மறுத்தது ஏன் ?- பல வருடங்கள் கழித்து மனம் திறந்த நடிகர் ரஜினிகாந்த்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் வசனத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்பது குறித்து பல ஆண்டுகள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது மனம் திறந்து உள்ளார். கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் சினிமா பிரபலங்கள் எழுதும் "தமிழ் சினிமாவின் பார்வையில் கலைஞர்" என்ற கட்டுரை வெளியாகி வருகிறது. இன்றைய முரசொலியில் நடிகர் ரஜினிகாந்த் கருணாநிதி பற்றி எழுதிய கட்டுரை வெளியாகி உள்ளது. அந்த கட்டுரையில் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ள சில சுவாரசிய விஷயங்களை இங்கு பார்க்கலாம்.
"உங்க வசனங்களை என்னால் பேச முடியாது"- கலைஞர் வசனங்களை பேச மறுத்த ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் 1980 ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைஞரின் நெருங்கிய நண்பர். தயாரிப்பாளருக்கு படத்தின் வசனங்கள் திருப்தி அளிக்கவில்லை. அதற்காக அவர் கருணாநிதியிடம் வசனங்களை எழுத கேட்டுக்கொண்டார். அதற்கு கருணாநிதியும் சம்மதித்தார் . இதை தயாரிப்பாளர், ரஜினியிடம் சொல்ல, ரஜினிக்கு தூக்கி வாரி போட்டதாம். எளிமையான வசனங்களை பேசி நடிக்கவே திண்டாடும் தான், கலைஞர் வசனங்களை எப்படி பேச முடியும் என தயாரிப்பாளரிடம் கேட்டுள்ளார் ரஜினிகாந்த். அதற்கு தயாரிப்பாளர், கலைஞரிடம் ரஜினிகாந்தை கூட்டிச் சென்றுள்ளார். கலைஞரை சந்தித்த ரஜினிகாந்த், "எளிமையான தமிழை பேசவே நான் கஷ்டப்படுகிறேன் உங்கள் தமிழை என்னால் எப்படி பேசி நடிக்க முடியும்?" என கேட்டாராம்.
"யாருக்கு எப்படி எழுத வேண்டும் என எனக்கு தெரியும்"- கலைஞர்
ரஜினி சொல்வதை முழுவதுமாக கேட்ட கலைஞர் சொன்னாராம், "யாருக்கு எப்படி எழுத வேண்டுமென எனக்கு தெரியும்". "நான் எம்ஜிஆர்க்கு எழுதுவது மாதிரி, சிவாஜிக்கு எழுத மாட்டேன். சிவாஜிக்கு எழுதுவது போல், எம்ஜிஆருக்கு எழுத மாட்டேன். உங்கள் ஸ்டைலில் நான் எழுதுகிறேன்", என சாதாரணமாக ரஜினியிடம் சொன்னதாக, ரஜினி அந்த கட்டுரையில் பதிவு செய்துள்ளார். இருந்த போதும் சமாதானம் அடையாத ரஜினி, "நாங்கள் படப்பிடிப்பில் வசனங்களை மாற்றுவோம். அப்படி இருக்கையில் உங்கள் வசனங்களை எப்படி மாற்ற முடியாது" எனக் கூறினாராம். அதற்கு கலைஞர் சற்று எதிர்பார்க்காத வகையில், "மாற்றுங்கள்! இது என திருக்குறளா?" எனக் கேட்டுள்ளார். இருந்தும் நடிகர் ரஜினிகாந்த் சமாதானம் அடையவில்லை.
தயாரிப்பாளரிடம் ரஜினிக்காக பேசிய கலைஞர்
அவர் அப்படிச் சொன்னதும் ரஜினிகாந்த் அமைதியாக இருந்தாராம். கலைஞர் அவரை கவனித்தார். "இதற்கு முன்னால் யார் வசனம் எழுதினாரோ, அவரே எழுதட்டும். நீ கவலைப்படாதே! நான் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டேன்!" என ரஜினியிடம் கூறியுள்ளார். பின் தன் உதவியாளர் மூலம் தயாரிப்பாளரை அழைத்து, "என்னுடைய வசனங்களை பேசுவது கடினமாக இருக்கும் என ரஜினிகாந்த் கூறினார். நான் அவரது ஸ்டைலயே எழுதித் தருவதாக கூறினேன். அதற்கு அவரும் சம்மதித்தார்" என கூறினார். "ஆனால் ரஜினிகாந்த் இந்த மாதம் பத்தாம் தேதி படப்பிடிப்பு எனக் கூறுகிறாரே? நான் அடுத்த மாதம் என இருந்தேன்". "நான் முன்பே ஒப்புக்கொண்ட பணிகள் இருப்பதால், என்னால் இப்படத்திற்கு வசனம் எழுத முடியாது" என தயாரிப்பாளரிடம் கலைஞர் கூறினாராம்.
கலைஞர் வசனங்களை தவறவிட்ட 'குற்ற உணர்ச்சியில்' ரஜினி
இவ்வாறு, தயாரிப்பாளரின் மனதையும் புண்படுத்தாமல், அதே சமயம் ரஜினியையும் திருப்திபடுத்திய கலைஞரின் செய்கை, அவர் மேல் உள்ள மதிப்பையும், மரியாதையையும் பன்மடங்கு உயர்த்தியதாக, ரஜினிகாந்த் பதிவு செய்துள்ளார். இருந்த போதும் "அவரது வசனங்களை பேசி நடித்திருக்கலாமோ"? "தவறு செய்து விட்டோமோ?"எனும் குற்ற உணர்ச்சி இன்றும் தனக்குள் இருந்து கொண்டிருப்பதாக ரஜினிகாந்த் அந்த கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.