தி கோட் படத்தை விஞ்சிய ரஜினிகாந்தின் வேட்டையன்; டிக்கெட் முன்பதிவில் புதிய சாதனை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், படத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்வதில், நடிகர் விஜயின் தி கோட் திரைப்படத்தின் சாதனையை இது மிஞ்சியுள்ளது. வேட்டையனுக்கான டிக்கெட் முன்பதிவு கோட் டிக்கெட்டுகளை விட 54 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புக் மை ஷோ தளத்தில் நேற்று (அக்டோபர் 7) டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை 1.40 லட்சத்துக்கும் அதிகமான வேட்டையன் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. தி கோட், இந்தியன் 2 மற்றும் ராயன் படங்களை விட வேட்டையன் படத்திற்கான டிக்கெட் விற்பனை அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்த டிக்கெட் விற்பனை
மொத்தமாக அனைத்து தளங்களிலும் சேர்த்து தற்போது வரை, வேட்டையன் திரைப்படம் தமிழில் மட்டும் 3.1 லட்சம் டிக்கெட்டுகள் விற்று ரூ.6.37 கோடி வசூலித்துள்ளது எனக் கூறப்படுகிறது. இது தவிர, தெலுங்கு மற்றும் இந்தியிலும் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் மொத்தமாக 3.36 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் இதுவரை முன்பதிவு மூலம் இந்தியாவில் ரூ.6.64 கோடி வசூலித்துள்ளது. முன்னதாக ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் முன்பதிவு மூலம் மட்டும் 8.77 லட்சம் டிக்கெட்டுகளுடன் ரூ.18 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்நிலையில், வேட்டையன் படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு நாள் இருப்பதால், படத்திற்கான முன்பதிவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.