தயாரிப்பாளருக்கு ரூ.1 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய நடிகர் பிரகாஷ் ராஜ்; பரபரப்பு தகவல்
பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் நடிப்பில் சமீபத்தில் கொரட்டாலா சிவாவின் தேவாரா: பாகம் 1 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் வினோத் குமார், பிரகாஷ் ராஜ் தனது படத்தின் படப்பிடிப்பில் ₹1 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட வினோத் குமார், செட்டில் இருந்து பிரகாஷ் ராஜ் காணாமல் போனது குறித்து பகிரங்கமாக கேள்வி எழுப்பினார். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகள் எந்தத் திரைப்படம் தொடர்பானது என்பது தெளிவாகத் தெரியவில்லை. எக்ஸ் தளத்தில், பிரகாஷ் ராஜ் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்ததை அடுத்து வினோத் குமாரின் குற்றச்சாட்டுகள் வெளிவந்தன.
பிரகாஷ் ராஜ் தேர்தலில் டெபாசிட் இழந்ததை குறிப்பிட்டு வினோத் குமார் பதிவு
பிரகாஷ் ராஜின் பதிவை குறிப்பிட்டு, "உங்களுடன் அமர்ந்திருக்கும் மற்ற மூவரும் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். ஆனால் நீங்கள் டெபாசிட் இழந்தீர்கள், அதுதான் வித்தியாசம். எனது படப்பிடிப்புத் தளத்தில் 1 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளீர்கள். தகவல் தெரிவிக்காமல் கேரவனில் இருந்து காணாமல் போனீர்கள். என்ன காரணம்?" என வினோத் குமார் பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில், இது செப்டம்பர் 30, 2024 அன்று நடந்ததாக தெரிவித்தார். மேலும், "கிட்டத்தட்ட 1000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள். அவருக்கு இது 4 நாள் ஷெட்யூல். வேறு சில தயாரிப்பில் இருந்து அழைப்பு வந்ததால் கேரவனை விட்டு வெளியேறினார்! எங்களைக் கைவிட்டுவிட்டார், என்ன செய்வது என்று தெரியவில்லை!! நாங்கள் ஷெட்யூலை நிறுத்த வேண்டியிருந்தது. அதனால் பெரிய இழப்பு." எனக் குறிப்பிட்டுள்ளார்.