PIFF சர்வதேச திரைப்பட விழாவிற்கு 3 தமிழ் திரைப்படங்கள் தேர்வு
22வது புனே சர்வதேச திரைப்பட விழா(PIFF) ஜனவரி 18 முதல் 25, 2024 வரை நடைபெறும் என்று PIFFயின் இயக்குநர் டாக்டர் ஜப்பார் படேல் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். புனே திரைப்பட அறக்கட்டளை மற்றும் மகாராஷ்டிரா அரசு இணைந்து நடத்தும் இந்த விழாவில் 51 நாடுகளைச் சேர்ந்த 140க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. இந்த திரைப்பட விழாவிற்கு சென்று கலந்து கொள்ள நினைப்பவர்கள் www.piffindia.com என்ற இணையதளத்திற்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற இருக்கும் இந்த திரைப்பட விழாவில் 3 தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.
திரையிடப்பட இருக்கும் தமிழ் மற்றும் மலையாள படங்கள்
நடிகர் சூரி மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து வெளியான இயக்குநர் வெற்றிமாறனின் 'விடுதலை- பாகம் 1' திரைப்படமும், சீனு ராமசாமியின் 'இடி முழக்கம்' என்ற திரைப்படமும், ஜெயப்பிரகாஷின் 'காதல் என்பது பொதுவுடமை' என்ற திரைப்படமும் இந்த சர்வதேச விழாவில் திரையிடப்பட இருக்கிறது. இதில் ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் 'இடி முழக்கம்' மற்றும் ஜெயப்ரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'காதல் என்பது பொதுவுடமை' ஆகிய திரைப்படங்கள் இன்னும் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், மலையாள மொழியில் ஜோதிகா நடித்திருந்த 'காதல் தி கோர்' மற்றும் ஜோஜி ஜார்ஜ் நடிப்பில் வெளியான 'இரட்டா' ஆகிய படங்களும் அந்த விழாவில் திரையிடப்படவுள்ளன.