ஆன்லைன் விளையாட்டுக்களில் வெல்லும் பரிசுத்தொகைக்கு வரிப்பிடித்தம்.. CBDT-யின் புதிய அறிவிப்பு என்ன?
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக உண்மையான பணத்தை வைத்து விளையாடும் ட்ரீம் 11, MPL போன்ற ஆன்லைன் விளையாட்டுகளின் ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த விளையாட்டுகளில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பரிசுப் பணமே அவை இந்தியாவில் மிகவும் பிரபலமடைவதற்குக் காரணமாக இருக்கிறது. இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் கிடைக்கு பரிசுப் பணத்தின் மீதான வரிகள் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது மத்திய நேரடி வரிகள் ஆணையம் (CBDT). ஆன்லைன் விளையாட்டுக்கள் இந்தியாவில் பிரபலமடைவதைத் தொடர்ந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களான டைகர் குளோபல் மற்றும் செகோயா கேபிடல் உள்ளிட்ட நிறுவனங்கள் மேற்கூறிய ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யத் துவங்கியிருக்கின்றன.
புதிய விதிமுறைகள் என்ன?
ஆன்லைன் விளையாட்டுகளில் வெற்றி பெறும் வாடிக்கையாளர்கள் தங்களது பரிசுப்பணத்தை கோரினால் அல்லது திரும்பப்பெற்றால் அதில் TDS-ஐ பிடித்தம் செய்த பிறகே அளிக்க வேண்டும் என அறிவித்திருக்கிறது CBDT. மேலும், வெற்றிபெற்ற பரிசுத்தொகையை வாடிக்கையாளர் கோரவில்லை அல்லது திரும்பப்பெறவில்லை என்றால் அதற்கு எந்த விதமான வரியும் இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறது CBDT. தற்போது இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளில் வெற்றிபெறும் பரிசுத்தொகைக்கு 30% வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாதத்தில் ஒரு வாடிக்கையாளர் ரூ.100 அல்லது அதற்கும் குறைவான பரிசுப்பணத்தை வென்றால் மட்டும் அதற்கு வரி எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.