அதிக காட்சிகளை திரையிட்டதற்காக திருப்பூர் சுப்பிரமணியம் திரையரங்குக்கு நோட்டீஸ்
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியத்திற்கு சொந்தமான திரையரங்கில், சல்மான்கான் திரைப்படத்தை அதிக காட்சிகள் திரையிட்டதற்காக, மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. சல்மான் கான், கத்ரீனா கைஃப் உள்ளிட்டோர் நடிப்பில் டைகர் 3 திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், ரசிகர்கள் திரைப்படத்தை கொண்டாடி மகிழ்கின்றனர். இந்நிலையில், இப்படம் தமிழிலும் வெளியாகி உள்ளது. இதனை திருப்பூரில் உள்ள தனது திரையரங்கில் சுப்பிரமணியம் திரையிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, ஒரு திரைப்படத்திற்கு அதிகபட்சமாக 5 காட்சிகள் திரையிடவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், காலை 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணிக்குள் அனைத்து காட்சிகளையும் முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் சர்ச்சையில் சிக்கும் திருப்பூர் சுப்பிரமணியம்
தீபாவளிக்கு வெளியான ஜப்பான், ஜிகர்தண்டா டபுள்X திரைப்படங்களுக்கு அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்த நிலையில், டைகர் 3 திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், திருப்பூர் சுப்பிரமணியம் தனது திரையரங்கில் டைகர் 3 திரைப்படத்தை காலை 7 மணிக்கு திரையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், சமீபத்தில் வெளியான லியோ திரைப்படத்தில், திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரிய லாபம் கிடைக்கவில்லை என திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருந்தார். லியோ படத்தின் தயாரிப்பாளரான லலித்குமாரும், திருப்பூர் சுப்ரமணியம் மீது சில குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.